ஷா ஆலாம், ஜூன் 30 - இந்திய தொழில்முனைவர்களுக்கு வணிக உபகரணங்களை வழங்கி உதவும் சிலாங்கூரின் i-SEED திட்டத்தின் கீழ் இவ்வாண்டு முதல், இரண்டாம் கட்டங்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 தொழில்முனைவர்கள் பயனடைந்துள்ளனர்.
முதல் கட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் 33 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், மேலும் 167 பேரின் விண்ணப்பங்கள் நேற்று அங்கீகரிக்கப்பட்டதாகவும், மனித வள வறுமை ஒழிப்புக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் வி.பாப்பராய்டு தெரிவித்தார்.
இந்த உதவித் திட்டம் உண்மையிலேயே தகுதியானவர்களுக்குச் சென்றடைவதை உறுதிச் செய்ய, ஒவ்வொரு விண்ணப்பங்களையும் i-SEED தேர்வுக் குழுவினர் துல்லியமாக பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
வியாபார வாய்ப்புகளை அதிகரித்து வருவாயை அதிகரிக்கச் செய்யும் இந்திய தொழில்முனைவர்களுக்கான இத்திட்டம், அத்தரப்பினரின் பொருளாதார ஆற்றலை மேம்படுத்தும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கடப்பாட்டினை வெளிப்படுத்துவதாக தமது ஃபேஸ்புக் பதிவின் மூலம் பாப்பராய்டு இவ்விபரங்களைப் பதிவிட்டார்.
இரண்டாம் கட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கான உதவிகள், ஆகஸ்ட் தொடங்கி கட்டம் கட்டமாக வழங்கப்படுமெனவும் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பராய்டு கூறினார்.
இந்தியர்களின் பொருளாதாரத் தரத்தை உயர்த்துவதற்காக 2021-இல் அறிமுகப்படுத்தப்பட்ட i-SEED திட்டம், சிறு வியாபாரிகளுக்கு வியாபாரத்துக்கான உபகரணப் பொருட்களை வழங்குகிறது.







