ஷா ஆலம், டிச 31: உலு சிலாங்கூரில் மொத்தம் எட்டு சிறு தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்துவதற்காக சிலாங்கூர் இந்திய தொழில்முனைவோர் உபகரண உதவி திட்டத்தின் (i-SEED) கீழ் வணிக உபகரண உதவியைப் பெற்றனர்.
டிசம்பர் 26 அன்று நடைபெற்ற ஐ-சிட் 2025 உபகரண ஒப்படைப்பு திட்டத்தை முன்னிட்டு இந்த உதவி வழங்கப்பட்டதாக ஐ-சிட் பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட எட்டு பெறுநர்களில் மூன்று உணவு வர்த்தகர்கள், ஒரு தையல்காரர், ஒரு முடிதிருத்துபவர், கேட்டரிங் வியாபாரி, தேங்காய் துருவி வியாபாரி மற்றும் ஒரு சில்லறை விற்பனையாளர் ஆகியோர் அடங்குவர்.
“சிலாங்கூர் மக்களின் நல்வாழ்வுக்கான ஐ-சிட் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்ததற்காக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு ஐ-சிட் பிரிவு தனது மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது,” என்று மாதவன் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
முன்னதாக, சிலாங்கூர் பட்ஜெட் 2026ஐ முன்வைக்கும் போது, அடுத்த ஆண்டு ஐ-சிட் திட்டத்தைத் தொடர RM1 மில்லியன் ஒதுக்கீட்டை அமிருடின் அறிவித்தார்.
ஏப்ரல் 7, 2021 அன்று தொடங்கப்பட்ட ஐ-சிட் திட்டம், சிலாங்கூரில் உள்ள இந்திய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வணிக வகைக்கு ஏற்ற உபகரணங்களை வழங்குவதன் மூலம் தொழில்முனைவோருக்கு உதவுகிறது.
i-SEED உதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் சிலாங்கூர் குடிமக்களாகவோ அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிப்பவர்களாகவோ இருக்க வேண்டும், மாதத்திற்கு RM3,000க்கும் முறைவாக வருமானம் ஈட்ட வேண்டும் மற்றும் மாநிலத்தில் ஒரு வணிகத்தை நடத்த வேண்டும்.


