ஷா ஆலம், டிச 5 - ஐ-சிட் எனப்படும் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டத்திறகு அடுத்தாண்டு பட்ஜெட்டில் 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக ஐ-சிட் ஒருக்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி மீடியா சிலாங்கூருக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்தார்.
ஐ-சிட் திட்டத்திற்கு வழங்கப்படும் RM 1 மில்லியன் ஒதுக்கீடு மாநிலப் பொருளாதாரத் திட்ட வரைவு இலாகாவால் நிர்வகிக்கப்படும். இந்த திட்டம் சிறப்பான முறையில் செயல்பட தகுதிபெற்ற தொழில் முனைவோர்களை தேர்ந்தெடுக்க தன்னுடைய குழு மூலம் நேரில் சென்று அடையாளம் காணப்படும் என மாதவன் தெரிவித்தார். கூடுதலாக தற்போது நடப்பு தேவைகளுக்கு ஏற்ப வணிகப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.

ஒவ்வொரு வருடமும் ஒப்புதல் கூட்டத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர், பொருளாதார திட்ட வரைவு இலாகா மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் தேர்வுக்கு பிறகே வணிகப் பொருட்கள் விநியோகிக்கப்படும். இந்த பொருட்கள் அரசாங்க நிகழ்வுகளிலும் அல்லது நேரடியாக உதவி பெறுபவர்களின் வீட்டிற்குச் சென்றும் வழங்கப்படும் என்றார்.
பொருட்கள் ஒப்படைக்கப்பட்ட பிறகு ஆறு மாதங்கள் கழித்து கண்காணிப்பு நடவடிக்கை நடத்தப்படும் என மாதவன் தெரிவித்தார். இதில் பொருட்களின் தரம் மற்றும் பயன்பாடு குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு தரவுகள் பதிவு செய்யப்படும்.
இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பெரிய அளவில் எந்த பிரச்சனைகளையும் சந்திக்கவில்லை என்றார் மாதவன். இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுபவர்கள் வணிகப் பொருட்களை சேதப்படுத்தி இருந்தாலும், அவற்றை தவறாகப் பயன் படுத்தினாலும் காவல்துறையில் புகார் அளிக்க வாய்ப்புண்டு, காரணம் இந்த பொருட்கள் அனைத்தும் அரசாங்கப் பொருட்களாகக் கருதப்படுகிறது.
மேலும், அப்பொருட்களை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் மாதவன் அறிவுறுத்தினார். அதனால், உதவி பெறுபவர்கள் பொருட்களை சிறப்பான முறையில் பயன்படுத்தி வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஐ-சிட் திட்டம் முழுமையாக சிலாங்கூர் மாநிலத்தின் ஒதுக்கீட்டை மட்டுமே, சார்ந்திருப்பதால் எதிர்வரும் ஆண்டுகளில் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க அவர் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் அதிகமான இந்தியர்கள் பயன் அடைவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
குறைந்த குடும்ப வருமானம் கொண்ட இந்தியர்கள் இது போன்ற திட்டத்தை சிறப்பாக பயன்படுத்தி வணிகத் துறையில் முன்னேற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


