ஷா ஆலம், டிச 5 - மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு கண்காணிப்பில் அடுத்தாண்டும் ஐ-சிட் திட்டம் சிறப்பாக செயல்படும் என ஐசீட் ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி (43) தெரிவித்தார்.
இத்திட்டத்தை அடுத்தாண்டும் தொடர சிலாங்கூர் மாநில அரசு 1 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது என்று அடுத்தாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
இந்த ஒதுக்கீட்டை பயன்படுத்தி குறைந்த வருமானம் ஈட்டும் சிறுதொழில் செய்யபவர்ளை அடையாளம் கண்டு தேவையான வியாபார பொருட்களை வழங்குவதில் ஐசீட் அதிக தீவிரம் காட்டும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் கீழ் கடந்தாண்டு 152 பேரும் இவ்வாண்டு 164 பேரும் உதவி பெற்றுள்ள நிலையில் அடுத்தாண்டு அதன் எண்ணிக்கையை 200ஆக அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளதாக அவர் விவரித்தார். அதில் தையல், உணவு, பலகாரங்கள், வாகனப் பட்டறை போன்ற தொழிகளில் ஈடுப்பட்டுள்ள சிறு தொழில்முனைவோர் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்றார்.
மேலும், ஐ-சிட் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களில் உலு சிலாங்கூர், கிள்ளான், கோலா லங்காட், பெட்டாலிங், சிப்பாங் போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் என அவர் கூறினார். எதிர்வரும் ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இலக்குக் கொண்டிருப்பதாக மாதவன் கூறினார்.
2021-2025 புள்ளிவிவரங்கள் அடிப்படையில், ஐ-சிட் திட்டத்தின் கீழ் உதவி பெற்றவர்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக அவர் விளக்கினார். இதன் மூலம் இத்திட்டத்தின் வெற்றியை நான் உணரலாம் என்றார்.
இத்திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் தொழில்முனைவோர்களைக் கொளரவிக்கும் வகையில் இந்த ஆண்டு, ஐ-சிட் அங்கீகார விழா ஒன்று மோரிப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் 13 நபர்களுக்கு பல்வேறு பிரிவில் சான்றிதழ், நினைவுசின்னம் மற்றும் பண அன்பளிப்பு வழங்கப்பட்டதாக அவர் பகிர்ந்து கொண்டார். இந்த விழாவை 2027ஆம் மீண்டும் நடத்த எண்ணம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்திய சமூதாயம் வியாபாரத் துறையில் பீடு நடை போட உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை தொழில்முனைவோர் சிறப்பாகப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


