ஷா ஆலாம், ஜூன் 29 - எல்ஆர்டி 3 ரயில் சேவையின் முதலாம் ஆண்டு செயல்பாட்டில், நாளொன்றுக்கு சுமார் 67,000 பயணிகள் இச்சேவையைப் பயன்படுத்துவார்கள் என பிரசரானா மலேசியா பெர்ஹாட் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை நாளொன்றுக்கு 1 லட்சத்து 17,000-க்கும் அதிகமான பயணங்களாக உயரும் என எதிர்பார்ப்பதாகப் பிரசரானா குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் நாசிர் அகமட் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வழித்தடம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தை விரைவுபடுத்தவும் உதவுவதோடு, நாட்டின் குறைந்த கார்பன் இயக்கம் (low carbon mobility) நோக்கிய இலக்குக்கும் துணையாக இருக்கும்.
கிள்ளான் பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியில் உள்ள போக்குவரத்து அமைப்பை மாற்றியமைத்து, நாட்டின் நீண்டகால பொருளாதார போட்டித்தன்மையை வலுப்படுத்தும் ஒரு முதலீடாக இந்த LRT3 விளங்கும்.
பண்டார் உத்தாமாவிலிருந்து ஜொஹான் செத்தியா வரை 37.8 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த வழித்தடத்தில் 20 புதிய நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் பண்டார் உத்தாமா, ஷா ஆலாம் மற்றும் கிள்ளான் போன்ற முக்கிய வளர்ச்சி மையங்களுக்கிடையிலான போக்குவரத்துத் தொடர்பு வலுவடையும்.
இதற்கிடையில், பொதுமக்கள் இன்று முதல் ஒரு மாதக் காலத்திற்கு எல்ஆர்டி 3 சேவை மற்றும் அதன் இணைப்புப் பேருந்துகளை (feeder bus) இலவசமாகப் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார்.






