கிள்ளான், ஜூன் 28: கிள்ளான் அரச மாநகராட்சி (MBDK) ஏற்பாடு செய்த "மலையேறுவோம், ஆரோக்கியத்தைப் பேணுவோம்"(Jom Hike’ Sihat Fest 2026) நிகழ்ச்சியில் பல்லினங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டின் தந்தையர் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ அண்டலாஸ், தாமான் ராக்யாட் (Taman Rakyat) பூங்காவில் இந்த மலையேறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு, உள்ளூர் மக்களிடையே உறவை வலுப்படுத்தும் தளமாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிள்ளான் மாநகராட்சியின் தலைவர் டத்தோ அப்துல் ஹமித் ஹுசைன், ஆரோக்கியமான வாழ்க்கை என்பது சரியான உணவு முறையிலிருந்தே தொடங்குகிறது என்றார்.
மலையேற்றம் போன்ற உடல் செயல்பாடுகள் அதிக கலோரிகளை எரிக்க உதவுகின்றன. இதுபோன்ற ஆரோக்கிய திட்டங்கள் தொடர பொது வசதிகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது பங்கேற்பாளர்கள் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் ஜும்பா (Zumba) நடனப் பயிற்சியிலும் பங்கேற்றனர். அதோடு இலவச மருத்துவப் பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீ கோத்தா கிள்ளான் மருத்துவ நிபுணத்துவ மையத்தின் (Sri Kota Klang Medical Centre) ஒத்துழைப்போடு இலவச மருத்துவப் பரிசோதனைகள், ஆலோசனைகள், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை (Mammogram) மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள் வழங்கப்பட்டன.
நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து தடுக்க, மக்கள் சீரான இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீ கோட்டா மருத்துவ மைய இயக்குநர் டான் சுவெட் குவான் வலியுறுத்தினார்.
இதனிடையே, இந்நிகழ்ச்சியின்போது கிள்ளான் அரச மாநகராட்சியின் வரி செலுத்தும் முகப்புகளும் திறக்கப்பட்டிருந்தன.
உடல் உறுப்பு தான இயக்கத்துடன், விளையாட்டுகள், பலூன் அலங்காரக் கலை, அதிர்ஷ்டக் குலுக்கல் ஆகியவையும் இடம்பெற்றன.







