ஷா ஆலாம்,ஜூன் 28 - சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்திருக்கும் நிலையில், பேராக்கில் இன்று காலை வெள்ளப் பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்திருக்கின்றது.
சிலாங்கூரில், இன்று காலை மணி 8-க்கு புக்கிட் ஜங்காங் தேசியப் பள்ளியில் அடைக்கலம் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 16-ஆகக் குறைந்தது.
சனிக்கிழமை இரவு, துயர் துடைப்பு மையமாக செயல்பட்ட அப்பள்ளிக்கூடத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 309 பேர் தங்கியிருந்தனர்.
இவ்வேளையில், பேராக் கம்பார் மாவட்டத்தில் உள்ள கோபெங் சமூக மண்டபத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
குவாலா ரசிலா, உலு கெருந்தும் (Ulu Geruntum, Kuala Razila ) கிராமத்தைச் சேர்ந்த அவர்களின் வீடுகள், வெள்ள நீர் பெருக்கத்தால் பாலம் உடைந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அவர்கள் அத்துயர் துடைப்பு மையத்துக்கு மாற்றப்பட்டனர்.
பேராக் மாநில பேரிடர் நிர்வாக மேலாண்மைக் குழு செயலகம் அத்தகவலை வெளியிட்டது.







