ஷா ஆலாம், ஜூலை 15: பத்து தீகா (Batu Tiga) பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புத் திட்டம், இந்த ஆண்டின் இறுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக முழுமையாக நிறைவடையும் என்று பத்து தீகா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டானியல் அல் ரஷிட் ஹரோன் தெரிவித்துள்ளார்.
வடிகால் அமைப்பை மேம்படுத்துவதற்காக ஆழப்படுத்தும் பணிகள் மற்றும் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வெள்ளத் தடுப்புச் சுவர் (Floodwall) அமைக்கும் பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
அதோடு, சுமார் 7 மீட்டர் உயரமுள்ள வெள்ளத் தடுப்புச் சுவரின் கட்டுமானப் பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சுவரை அமைப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்றாலும், இந்த ஆண்டு இறுதிப் பருவமழைக்கு முன்பாகவே அதனை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகள் யாவும் முடிவடையும் பட்சத்தில், பலத்த மழை பெய்து ஆற்றின் நீர்மட்டம் உயரும் காலங்களில், அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளும் வணிக வளாகங்களும் வெள்ளப் பாதிப்பிற்குள்ளாவது முழுமையாகத் தடுக்கப்படும் என்றும் அவர் விவரித்தார்.







