பெய்ஜிங், ஆகஸ்ட் 11 — சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இன்று இரவு தொடங்கி அடுத்த 24 மணி நேரத்தில், அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள டால்பின் புயலால் உருவாகும் அதிகளவிலான ஈரப்பதம், வடக்கு சீனாவில் நிலவும் குளிர்ந்த காற்றுடன் இணைவதால், பெய்ஜிங்கில் கனமழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் வியாழக்கிழமை வரை பெய்ஜிங்கின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என நகர வானிலை ஆய்வு சேவை அறிவித்துள்ளது.
இதனிடையே, தோங்சோ, தாக்சிங், ஃபாங்ஷான், மெந்தோகோ, ஹுவைரோ மற்றும் ஃபெங்தாய் உள்ளிட்ட மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கான மொத்த மழைப்பொழிவு 200 மில்லிமீட்டருக்கும் அதிகமாக பதிவாகும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்கில் ஓராண்டுக்கான சராசரி மழைப்பொழிவு 528 மில்லிமீட்டராகும். இதில் பெரும்பகுதி ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்திலேயே பதிவாகிறது.
இந்நிலையில், கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







