ஷா ஆலாம், ஜூன் 27 - 37.8 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட ஷா ஆலாமுக்கான எல்.ஆர்.டி 3 (LRT3) ரயில் சேவைத் திட்டம் முழுமைப் பெற்று பயணிகளுக்குத் திறக்கப்படவுள்ளது.
பண்டார் உத்தாமாவிலிருந்து ஜோஹன் செத்தியா வரையிலான 20 நிலையங்களை உட்படுத்திய அந்த ரயில் சேவையின் மூலம், அந்நிலையங்கள் நெடுகே வசிக்கும் 20 லட்சம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஷா ஆலாம் ரயில் திட்டத்தின் தலைவர் அரிஃபின் இட்ரீஸ் தெரிவித்தார்.
இத்திட்டத்தை நாளை ஜூன் 28-ஆம் தேதி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார்.
இந்த ஷா ஆலாம் இணைப்பு (Shah Alam Line), பண்டார் உத்தாமா நிலையத்தில் காஜாங் இணைப்பையும் ( Kajang Line), கிளென்மெரி 2 நிலையத்தில் கிளானா ஜயா இணைப்பையும் ( Kelana Jaya Line ) இணைக்கின்றது.
ஷா ஆலாம் எல்.ஆர்.டி 3 நிலையங்கள் நெடுகே , 323 இடங்களில் நிற்கும் ஒரு ரிங்கிட் கட்டணத்தில் இயங்கும் 40 ஃபீடர் பேருந்துகளின் சேவை, காலை மணி 6 தொடங்கி இரவு மணி 11.30 வரை செயல்படும்.
இரண்டு ரிங்கிட் கட்டணத்தில் வேன் சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.







