ஷா ஆலம், மார்ச் 24 – ரவாங் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சுகாதார அமைச்சின் (KKM) அதிகாரி ஒருவர் புகைபிடித்தது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
விசாரணையில், அந்த நபர் கோம்பாக் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் அரசு ஊழியர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்தைப் பேணும் நோக்கில் கொண்டுவரப்பட்ட '2024-ஆம் ஆண்டு பொதுச் சுகாதாரத்திற்கான புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்' (சட்டம் 852) கீழ், உணவகங்களில் புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை மீறியதற்காக அந்த அதிகாரிக்கு 16(2) பிரிவின் கீழ் அபராதம் (Compound) விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, அரசு ஊழியர்களின் நற்பெயரையும் ஒருமைப்பாட்டையும் காக்கும் வகையில், அவர் மீது அரசு ஊழியர்கள் நடத்தை மற்றும் ஒழுங்குமுறை விதிகளின் கீழ் உள்நாட்டுத் துறைசார் நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட், சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய சுகாதார அமைச்சின் ஊழியர்களே இத்தகையச் செயலில் ஈடுபட்டது வருத்தமளிப்பதாகவும், இது தொடர்பாகத் துரித நடவடிக்கை எடுக்க தான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இச்சம்பவத்தை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்த நபருக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவகங்கள் உட்பட பொதுமக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள 28 இடங்கள் புகைபிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான முறையில் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என அமைச்சு எச்சரித்துள்ளது.
இதுபோன்ற விதிமீறல்களைக் கண்டால் பொதுமக்கள் தயக்கமின்றி அமைச்சின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாகப் புகார் அளிக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.








