நிபோங் டெபால், டிச 31: நேற்று மாலை சுங்கை பாக்காப்பில் உள்ள ஓர் உணவகத்தில் கூர்மையான ஆயுதம் ஏந்திய, முகமூடி கும்பலால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்தனர். இதன் தொடர்பான விசாரணைக்கு உதவ இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இருவரும் கைது செய்யப்பட்டதாக பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் தெரிவித்தார்.
"சம்பவத்தில் தொடர்புடைய பல சந்தேக நபர்களைக் தேடி வருவது உட்பட மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
"இந்த வழக்கு கொலைக்கான தண்டனைச் சட்டப்பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது," என்று அசிசி இஸ்மாயில் கூறினார்.
எனவே, இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடம் தகவல் இருந்தால் அதை காவல்துறைக்கு அனுப்புமாறு அல்லது விசாரணைக்கு உதவ அருகிலுள்ள எந்த காவல் நிலையத்திற்கும் வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
மாலை 4.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், கடன் பிரச்சனையில் அதிருப்தி அடைந்த ஆயுதம் ஏந்திய ஒரு குழு பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கியது. அதில் தலையில் வெட்டு காரணமாகப் பலத்த காயமடைந்த 59 வயது நபர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது, மேலும் படுகாயமடைந்த இருவர் சுங்கை பாகாப் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த சம்பவம் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.


