உலகளாவிய விலை உயர்வு - மலேசிய இந்திய உணவகங்களைப் பாதிக்கும்

27 மார்ச் 2026, 10:16 AM
உலகளாவிய விலை உயர்வு - மலேசிய இந்திய உணவகங்களைப் பாதிக்கும்

கோலாலம்பூர், மார்ச் 27: மலேசியாவில் உள்ள இந்திய உணவகங்கள் தற்போது விநியோகச் சங்கிலித் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகப் புதிய சவால்களை எதிர்கொண்டு வருவதாக மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் (PRISMAS) தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துரைத்த சங்கத்தின் தலைவர் டத்தோ ஜே. கோவிந்தசாமி, தற்போதைய சூழல் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும், சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோகப் பிரச்சனைகள் உணவகங்களின் தினசரி செயல்பாடுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மலேசியாவில் தற்போதுள்ள மூலப்பொருட்களின் இருப்பு சுமார் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.

இந்திய உணவகங்களுக்குத் தேவையான கோழி இறைச்சி, மசாலாப் பொருட்கள், காய்கறிகள், உருளைக்கிழங்கு மற்றும் தேங்காய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பெரும்பாலும் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஒருவேளை இந்த மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயருமானால், உணவக உரிமையாளர்கள் உணவு விலையை 20 முதல் 30 விழுக்காடு வரை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்று அவர் விளக்கினார்.

இருப்பினும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் உணவின் தரத்தையும் சிதைக்கும் வகையில் உணவின் அளவைக் குறைக்கப் போவதில்லை என்பதில் உரிமையாளர்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஹரிராயா பண்டிகைக் காலம் என்பதால் வாடிக்கையாளர்களின் வருகை சீராக இருப்பதாகவும், ஆனால் பண்டிகைக் காலம் முடிந்த பிறகு உணவுக்கான தேவை குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.

இதற்கிடையில், எரிபொருள் மற்றும் எரிவாயு விலையேற்றம் மற்றுமொரு பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. இந்தச் செலவினங்கள் அதிகரித்தால், மின்சாரம் அல்லது விறகு அடுப்பு போன்ற பாரம்பரிய முறைகளுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்படும் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய மாற்றங்களுக்குக் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், அரசாங்கம் உணவகத் துறைக்கான பணியாளர்கள் எண்ணிக்கையின் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஏற்கனவே போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் நாட்டில் உள்ள சுமார் 15 விழுக்காடு இந்திய உணவகங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய பொருளாதாரச் சூழல் மேலும் பல உணவகங்களைப் பாதிக்கக்கூடும் என்று பிரிமாஸ் சங்கத் தலைவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தத் துறையின் நிலைத்தன்மையை உறுதி செய்ய எரிபொருள் மற்றும் எரிவாயு விலையை அரசாங்கம் சீராக வைத்திருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அதே வேளையில், மக்களைப் பாதிக்காத வகையில் பொருளாதாரச் சவால்களை விவேகத்துடன் கையாண்டு வரும் பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு அவர் தனது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.