ஷா ஆலம், ஜூன் 19: சிலாங்கூர் மாநிலத்தில் ஆறு வயது மற்றும் அதற்குக் கீழ் உள்ள தங்களது குழந்தைகளின் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், உழைக்கும் தாய்மார்களுக்கான 'மாமாகெர்ஜா' (MamaKerja) திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு கூடுதலாக 5 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
சிலாங்கூரின் பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தும் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தின் கீழ் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பிரசவத்திற்குப் பிறகும் தொடர்ந்து வேலைக்குச் செல்ல விரும்பும் மேலும் 5,000 பெண்களுக்குத் தலா 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு 10 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது என்றும், ஆறு வயது மற்றும் அதற்குக் கீழ் உள்ள தங்களது குழந்தைகளைக் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு அல்லது மழலையர் பள்ளிகளுக்கு (Taska) அனுப்பிவிட்டு வேலைக்குச் செல்லும் தகுதியான தாய்மார்கள் அனைவரும் இந்த 1,000 ரிங்கிட் நிதியுதவியைப் பெற முடியும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
2026-ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் (Belanjawan Selangor 2026) குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, வேலைக்குச் செல்லும் பெண்களின் உழைப்பைப் போற்றும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று அமிருடின் தெளிவுபடுத்தினார்.
இந்த நிதியுதவியானது 'நைன்' (Nine) செயலி அல்லது செயலி மூலமாகத் தாய்மார்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும். இந்த திட்டம் குடும்பத்திற்கும் மாநிலத்திற்கும் பங்காற்றும் பெண்களுக்கு வழங்கும் ஒரு அங்கீகாரம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த கூடுதல் நிதியின் மூலம் சிலாங்கூரில் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் தாய்மார்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 10,000 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத மாநிலத் தேர்தலின் போது பக்காத்தான் ஹராப்பான் (PH) மற்றும் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி மக்களுக்கு அளித்த 'தாவாரான் கித்தா சிலாங்கூர்` எனும் 100 நாட்கள் வாக்குறுதிகளில்' இந்த 'மாமாகெர்ஜா' திட்டமும் ஒன்றாகும்.
மாத வருமானம் 8,000 ரிங்கிட்டிற்கு மிகாமல் இருக்கும், அதே வேளையில் 12 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளைக் கொண்ட உழைக்கும் தாய்மார்கள் இந்த ஒரே முறை வழங்கப்படும் 1,000 ரிங்கிட் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர்.







