ஷா ஆலம், ஜூன் 22 - எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இலவசக் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இது மாநிலத்தின் மனித மூலதன மேம்பாட்டிற்காகச் செய்யப்பட்ட ஒரு முதலீடாகும் என செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் தெரிவித்துள்ளார். 965 பள்ளிகளை உள்ளடக்கிய இந்தத் திட்டம், குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நல்வாழ்வை உறுதி செய்வதோடு, சிலாங்கூர் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சிறந்த முறையில் வடிவமைக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வறுமை அல்லது நேரமின்மை காரணமாகக் காலை உணவைத் தவிர்க்கும் மாணவர்களுக்கு இந்த முன்முயற்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றார்.
இது பெற்றோரின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைப்பது மட்டுமன்றி, மாணவர்கள் வகுப்பறையில் தங்களின் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வழிவகுக்கும் என்றும், இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்குத் தாமதமாக வருவது மற்றும் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுப்பது போன்ற பிரச்சனைகள் பெருமளவு குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியாவில் இதே போன்றதொரு திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதை உதாரணம் காட்டிய டாக்டர் குணராஜ், அங்கு இலவசக் காலை உணவுத் திட்டமானது மாணவர்களின் வருகையை ஊக்குவித்ததுடன், பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தியுள்ளது என்பதை நிரூபித்துள்ளதாகக் கூறினார்.
அதுமட்டுமன்றி, பின்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், கல்வியில் செய்யும் முதலீடே மிகச் சிறந்தது என்பதை உணர்ந்து இத்தகைய திட்டங்களை நீண்ட காலமாகவே அமல்படுத்தி வருகின்றன என்றும் அவர் விவரித்தார்.
இந்த இலவசக் காலை உணவுத் திட்டத்திற்கான தகுதியான மாணவர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மத்திய அரசின் கூடுதல் உணவுத் திட்டத்தின் (RMT) நடைமுறையைப் போன்றே வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த இலவச உணவு வழங்கப்படும். இத்திட்டம் சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் கீழ் பதிவு பெற்ற தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள் மட்டுமன்றி, சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகாவின் (JAIS) கீழ் இயங்கும் மதப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.







