ஷா ஆலம், ஜூன் 24: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய ஒட்டுமொத்தப் பகுதிகளிலும் இன்று மாலை 6.00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை நீடிக்கக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரித்துள்ளது.
இதேபோன்ற மோசமான வானிலை பேராக், திரங்கானு, பகாங் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் முழுவதிலும், அதே வேளையில் கிளந்தான் மற்றும் ஜோகூர் மாநிலங்களின் சில குறிப்பிட்ட மாவட்டங்களிலும் நிகழும் என்று அந்த மையம் கணித்துள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான அடர்த்தியுடன் பலத்த மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படும் போது அல்லது அத்தகைய இடியுடன் கூடிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போது மட்டுமே இந்த இடி மின்னல் எச்சரிக்கை விடுக்கப்படும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது ஒரு முறை வெளியிடப்பட்டால் அதிகபட்சமாக ஆறு மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால வானிலை எச்சரிக்கை நடவடிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மிகச் சரியான மற்றும் அண்மைக்கால வானிலை தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள www.met.gov.my என்ற வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தை நாடலாம்.
மேலும், அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடர்வதோடு, 'myCuaca' செயலியைத் தங்களின் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






