4 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை - மெட்மலேசியா

16 ஜூன் 2026, 6:41 AM
4 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை - மெட்மலேசியா

ஷா ஆலம், ஜூன் 16 – இன்று மாலை 4.00 மணி வரை பெர்லிஸ் மாநிலம் முழுவதிலும் மற்றும் கெடா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் பல மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அண்மைத் தகவல்படி, பெர்லிஸ் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் இந்த மோசமான வானிலையை எதிர்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில், கெடா மாநிலத்தில் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொக்கோக் செனா மற்றும் பாடாங் தெராப் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சரவாக் மாநிலத்தில் கூச்சிங், செரியான், சமரஹான் மற்றும் ஸ்ரீ அமான் ஆகிய இடங்களும் இந்தா வானிலையால் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் மிரியில் உள்ள மருடி மற்றும் லிம்பாங் ஆகிய இடங்களும் இந்த எச்சரிக்கை வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதேவேளை, சபா மாநிலத்தின் உட்பகுதியில் உள்ள கோலா பென்யூ, பியூஃபோர்ட் மற்றும் தம்புனான் ஆகிய மாவட்டங்களுக்கும், மேற்கு கடற்கரை (Pantai Barat) பிரிவில் உள்ள பாப்பார், புத்தாத்தான், பெனாம்பாங், கோத்தா கினபாலு, துவாரான் மற்றும் கோத்தா பெலுட் ஆகிய இடங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் கினபாத்தாங்கான், சண்டக்கான், பித்தாஸ் மற்றும் கூடாட் ஆகிய பகுதிகளும் இதில் அடங்கும்.

"ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான தீவிர மழைப்பொழிவு ஏற்படக் கூடிய அறிகுறிகள் தென்படும் போது அல்லது பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் போது இத்தகைய இடி மின்னல் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இந்த எச்சரிக்கையானது, ஒவ்வொரு முறை வெளியிடப்படும் போதும் அதிகபட்சமாக 6 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால வானிலை எச்சரிக்கையாகும்," என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் எப்போதும் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறும், தங்களின் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், வானிலை குறித்த அண்மை மற்றும் துல்லியமான விவரங்களை அறிய மெட்மலேசியாவின் (MetMalaysia) அதிகாரப்பூர்வ ஊடகத் தளங்களை நாடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.