ஷா ஆலம், ஜூன் 24: சிலாங்கூரின் பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தும் திட்டத்தின்' (Pakej Pengukuhan Daya Tahan Selangor) கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட மாதத்திற்கு 30 ரிங்கிட் பொதுப் போக்குவரத்துப் பயணக் கட்டண மானியத்தை, பிரத்தியேகமாக 'டிஆர்டி' (DRT - Demand Responsive Transit) எனப்படும் உடனடித் தேவைக்கான போக்குவரத்துச் சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மாநில போக்குவரத்து செயற்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெளிவுபடுத்தியுள்ளார்.
'நைன்' (NINE) செயலி (Aplikasi) வழியாக விநியோகிக்கப்படும் இந்த மானியமானது, அண்மைக்காலமாக மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்களின் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ள பின்னணியில், மக்களின் சுமையைக் குறைப்பதையும் அதே வேளையில் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டைப் பொதுமக்களிடையே ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்குக் கட்டண மானியத்தைப் பெற முடியும் என்று கூறிய அவர், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து அனுமதி பெறும் முதல் 50,000 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த உதவி வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த மானிய உதவி, பொதுமக்கள் தங்களின் பயணத்தின் தொடக்கப் புள்ளி மற்றும் இறுதி இலக்கை அடைவதில் (First and Last Mile Connectivity) உள்ள போக்குவரத்துச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமைவதோடு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மக்களின் அதிகப்படியானச் சார்பு நிலையைக் குறைக்க உதவும் என அவர் 'மீடியா சிலாங்கூர்' நிறுவனத்திடம் தெரிவித்தார்.







