ஷா ஆலம், ஜூன் 23 – சிலாங்கூர் மாநில அரசு தனது தொழில்முறை பயிற்சி (Internship) திட்டத்தின் கீழ் இணையும் மாணவர்களுக்கு 1,500 ரிங்கிட் வரை மாதாந்திர அலவன்ஸ் வழங்குவது தொடர்பான இறுதி கட்ட நடைமுறைகளைத் தீவிரமாக வகுத்து வருகிறது.
மாநில அரசு முகமைகள் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் அலுவலகங்களில் மாணவர்கள் தங்களின் தொழில்முறை பயிற்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இந்த இன்டர்ன்ஷிப் திட்டம் தற்சமயம் 1,500 ரிங்கிட் வரையிலான அலவன்ஸ் தொகையுடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநில அரசின் உபகாரச்சம்பளம் (Scholarship) பெற்று வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்கள், படிப்பை முடித்த பின் சிலாங்கூர் மாநிலத்திற்கே திரும்பி வந்து சேவை செய்வதை ஊக்குவிப்பதற்கான புதிய முயற்சிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன என்றார் மந்திரி புசார்.
வெளிநாடுகளில் படித்து, உள்நாட்டுத் தொழில்துறைக்குத் தேவையான சிறப்பாற்றலைக் கொண்டுள்ள இம்மாணவர்கள், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் அலுவலகங்களிலும் அரசுக்குச் சொந்தமான துணை நிறுவனங்களிலும் (Subsidiaries) தங்களின் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்தத் திட்டம் இறுதி செய்யப்பட்டு வருவதாக அவர் விவரித்தார்.
இதன் மூலம், அதிகமான இளம் பட்டதாரிகள் ஈர்க்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் பெருகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2026-ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது, தொழில்முறை பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 1,500 ரிங்கிட் அலவன்ஸ் வழங்க அரசு உறுதியளித்திருந்ததை டத்தோ மந்திரி பெசார் சுட்டிக்காட்டினார்.
தற்போது நடைமுறையில் உள்ள பொதுவான இன்டர்ன்ஷிப் திட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மாதத்திற்கு வெறும் 800 முதல் 900 ரிங்கிட் வரையிலான மிகக் குறைந்த அளவிலான அலவன்ஸே வழங்கப்பட்டு வரும் வேளையில், சிலாங்கூர் அரசின் இந்த புதிய அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.







