100 ரிங்கிட் கித்தா சிலாங்கூர் பற்றுச்சீட்டு தகுதி சரிபார்ப்பு நாளை நண்பகல் தொடங்கும்; மந்திரி பெசார் அறிவிப்பு

22 ஜூன் 2026, 9:55 AM
100 ரிங்கிட் கித்தா சிலாங்கூர் பற்றுச்சீட்டு தகுதி சரிபார்ப்பு நாளை நண்பகல் தொடங்கும்; மந்திரி பெசார் அறிவிப்பு

ஷா ஆலம், ஜூன் 22 - சிலாங்கூர் மாநில மக்கள் தங்களுக்கு 100 ரிங்கிட் மதிப்புள்ள 'கித்தா சிலாங்கூர்' பற்றுச்சீட்டு நிதியுதவி கிடைத்துள்ளதா என்பதை நாளை நண்பகல் 12 மணி முதல் 'கித்தா சிலாங்கூர்' அதிகாரப்பூர்வ இணையப்பக்கம் வழியாகச் சரிபார்த்துக் கொள்ளலாம் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மாதம் 5,000 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவான வருமானம் பெறும் ஒற்றைத் தாய்மார்களும் (Ibu Tunggal) இந்த இணையப்பக்கம் வழியாக இந்நிதியுதவிக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தகுதியுடைய 30,000 குடும்பங்களுக்கு மாதம் 300 ரிங்கிட் நிதியுதவி வழங்கும் 'பிங்காஸ்' (BINGKAS) எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு வாழ்க்கை உதவித் திட்டத்தையும் மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக மந்திரி பெசார் கூறினார்.

உலகளாவிய வாழ்க்கைச் செலவின உயர்வு மக்களிடம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, சிலாங்கூர் மாநில அரசு 138 மில்லியன் ரிங்கிட்டை மக்களுக்கு நேரடி நிதியுதவியாக வழங்க ஒதுக்கியுள்ளது என்று அவர் விவரித்தார்.

மாநில அரசால் விநியோகிக்கப்படும் இந்த நிதியுதவிகள் அனைத்தும் தற்காலிகக் குறுகிய கால நிவாரணங்கள் மட்டுமே ஆகும், பொதுமக்கள் இந்த உதவிகளையே நீண்ட காலத்திற்குச் சார்ந்திருக்கக் கூடாது என்பதற்காக மக்களைத் சுயசார்புடையவர்களாக மாற்றும் திட்டங்களும் இதனுடன் இணைத்தே செயல்படுத்தப்படும் என்றும் அமிருடின் ஷாரி விளக்கினார்.

இந்த நிதியுதவிகளைப் பெறும் அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில், நடப்பு ஆண்டில் நடத்தப்படவிருக்கும் 'சிலாங்கூர் தொழில்முறை திட்டம்' (Selangor Career Programme) உட்பட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

தகுதியுடைய மக்களுக்கு இந்த 100 ரிங்கிட் கித்தா சிலாங்கூர் பற்றுச்சீட்டு எதிர்வரும் ஜூன் 30ஆம் தேதி முதல் ஆறு மாத காலத்திற்கு விநியோகிக்கப்படும்.

இந்த நிதியுதவி தகுதியான இலக்குக் குழுவினரைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மாநில அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவின் (ICU) துல்லியமான தரவுகளின் அடிப்படையில் 50,000 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.