பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்த மாணவர்; விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகப் பேராக் மாநிலக் கல்வி இலாகா உறுதி

23 ஜூன் 2026, 8:38 AM
பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்த மாணவர்; விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகப் பேராக் மாநிலக் கல்வி இலாகா உறுதி

ஈப்போ, ஜூன் 23 – ஈப்போவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் முதலாம் படிவ மாணவர் ஒருவர் பள்ளி கட்டிடத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு பேராக் மாநிலக் கல்வி இலாகா (JPN) தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

காவல்துறையின் விசாரணைக்குத் துணையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இச்சம்பவம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆராய்வதற்காகத் தங்கள் தரப்பும் விசாரணை ஒன்றை முடுக்கிவிட்டுள்ளதாகப் பேராக் மாநிலக் கல்வி இலாகா தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான அந்த 13 வயது மாணவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் விரைவில் குணமடையவும், இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் அவரது குடும்பத்தினருக்கு மன தைரியமும் பொறுமையும் கிடைக்க இறைவனை வேண்டுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கல்வி இலாகா மேற்கொண்டுள்ளது.

அதோடு, இச்சம்பவத்தால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனை மற்றும் ஆதரவுகளும் (Psychosocial support) வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தில் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும், மாணவரின் குடும்பத்தின் உணர்வுகளுக்குப் பொதுமக்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் பேராக் மாநில கல்வி இலாகா கேட்டுக்கொண்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.