காஜாங், ஜூலை 15: செமினி, ஜாலான் தாமான் பெலாங்கி (Jalan Taman Pelangi) குடியிருப்புப் பகுதியில் தான் கடத்தப்படவிருந்ததாக 16 வயதுடைய பதின்ம வயதுப் பெண் ஒருவர் நேற்று பொய் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியிலிருந்து வீடு திரும்புவதற்கான வாகனத்தைத் தவறவிட்டதால், குடும்பத்தினர் தன்னைத் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் அந்தப் பெண் இக்கதையை ஜோடித்துள்ளார்.
நேற்று மாலை 4.36 மணியளவில் அந்தப் பெண்ணிடமிருந்து தங்களுக்குப் புகார் கிடைத்ததாகக் காஜாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.
எனினும், இச்சம்பவம் குறித்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், அங்குள்ள சிசிடிவி (CCTV) பதிவுகளை ஆய்வு செய்தபோது, அப்பெண் கொடுத்த புகாருக்கும் அங்கு நடந்த உண்மைச் சம்பவத்திற்கும் முற்றிலும் வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
பள்ளி நேரம் முடிந்த பிறகு வீட்டிற்குச் செல்வதற்கான வாகனத்தைத் தவறவிட்டதால், தனது குடும்பத்தினர் கோபித்துக் கொள்வார்கள் என்ற பயத்தின் காரணமாகவே அப்பெண் இத்தகைய நாடகத்தை ஆடியுள்ளார் என்று நாஸ்ரோன் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பொது ஊழியருக்குப் பொய்யானத் தகவல்களை வழங்கிய குற்றத்திற்காக அந்தப் பெண்ணிற்கு எதிராகவே தற்போது காவல்துறையினர் புகாரைப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு, அரசு ஊழியரை ஏமாற்றும் நோக்கில் பொய்யானத் தகவலை வழங்கிய குற்றத்திற்காகத் தண்டனைச் சட்டம் செக்ஷன் 182-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்பட சட்டம் வழிவகை செய்கிறது.







