ஷா ஆலம், ஜூன் 23 – 'வவுச்சர் கித்தா சிலாங்கூர்' (Baucar Kita Selangor) திட்டத்தின் பலன்கள் கூடுதலான பொதுமக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய கிராமப்புறங்களில் உள்ள உள்ளூர் கடைகளை இந்தத் திட்டத்தின் கீழ் விற்பனையாளர்களாக (Vendors) இணைத்துக் கொள்வதற்கான பரிந்துரைகளை ஏற்க மாநில அரசு தயாராக உள்ளது.
பிங்காஸ் உதவித் திட்டத்தின் (BINGKAS) கீழ் பயன்பெறுபவர்களுக்குப் பொருட்களை வழங்கும் விநியோகச் சங்கிலியில், இதுவரை மொத்தம் 1,500 கடைகள் இணைந்துள்ளதாக மாநில நல்வாழ்வுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
அத்தோடு, பல்வேறு மாநிலச் சட்டமன்றத் தொகுதி சேவை மையங்களிடம் இருந்து மேலும் 30 கூடுதல் கடைகளுக்கான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் மொத்த விற்பனையாளர்களின் எண்ணிக்கை 1,530 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
இருப்பினும், கிராமப்புறங்களில் இயங்கும் உள்ளூர் கடைகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் விநியோகிப்பாளர்களாக இணைத்துக் கொள்வதற்கு மாநில அரசு தயாராகவே உள்ளது. இந்தத் திட்டத்திற்கான உள்ளூர் கடைகளைப் பரிந்துரைக்குமாறு மாநில அரசு ஏற்கனவே சட்டமன்ற சேவை மையங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில், 100 ரிங்கிட் மதிப்புள்ள கித்தா சிலாங்கூர் பற்றுச்சீட்டு உதவி கிடைத்துள்ளதா என்பதை அதிகாரப்பூர்வ இணையப்பக்கமான www.baucarkitaselangor.com வழியாக இன்று நண்பகல் 12.00 மணி முதல் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
5,000 ரிங்கிட்டிற்கும் குறைவாக மாத வருமானம் ஈட்டும் ஒற்றைத் தாய்மார்களும் (Ibu Tunggal) இதே இணையத்தளத்தின் வழி இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான பிரத்யேக வாய்ப்பையும் மாநில அரசு வழங்கியுள்ளது.
தகுதிபெறும் பயனாளர்களுக்கு எதிர்வரும் ஜூன் 30-ஆம் தேதி முதல் ஆறு மாதக் காலத்திற்கு வவுச்சர் விநியோகிக்கப்படும்.







