கோத்தா கினபாலு, ஆகஸ்ட் 17 — நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு சட்ட உதவியை வழங்குவதற்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என நம்புவதாகப் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனித்து வாழும் பெண்கள் பலர் தங்களுக்குரிய உரிமைகளைத் தொடர்ந்து கோர விரும்பினாலும், சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி இல்லாத நிலை காணப்படுவதாக டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி குறிப்பிட்டார்.
அதனால், இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் மேம்பாட்டுத் துறை (JPW), வழக்கறிஞர்களுடன் இணைந்து பெண்களுக்கு சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்டுதல் வழங்கி வருகிறது.
குறிப்பாக, நீதிமன்றத்தில் mut’ah அல்லது பிள்ளைகளுக்கான பராமரிப்புத் தொகை தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு கிடைத்திருந்தாலும், முன்னாள் கணவர்கள் பணத்தைச் செலுத்தாமல் இருக்கும் பெண்களுக்கு இந்த சட்ட உதவி மிகவும் முக்கியமானதாகும்.
பெண்கள், தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் உரிய பாதுகாப்பையும் சட்ட உரிமைகளையும் பெறுவதில் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளில் சட்ட உதவியும் ஒரு பகுதியாகும் என நான்சி தெரிவித்தார்.







