BUDI95 திட்டத்தின் கீழ் 200 லிட்டர் ஒதுக்கீடு தொடரும்

23 ஜூன் 2026, 2:18 AM
BUDI95 திட்டத்தின் கீழ் 200 லிட்டர் ஒதுக்கீடு தொடரும்

புத்ராஜெயா, ஜூன் 23 – மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலையும், அதனால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் தாக்கங்களையும் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே தற்சமயம் 200 லிட்டராக இருக்கும் பூடி மடாணி RON95 (BUDI95) மாதாந்திர எரிபொருள் ஒதுக்கீட்டை மாற்றி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

மாதாந்திர ஒதுக்கீட்டை மீண்டும் 300 லிட்டராக உயர்த்துவது குறித்துப் பேசுவதற்கு இது சரியான தருணம் அல்ல என்று இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்ஸா அசிசான் குறிப்பிட்டார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை எந்த அளவிற்குத் திறம்படச் செயல்படுகிறது என்பதையும், அது உலகளாவிய எண்ணெய் சந்தையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையும் மதிப்பிடுவதற்கு புத்ராஜெயாவிற்கு இன்னும் கூடுதல் காலம் தேவைப்படுகிறது என அவர் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு இன்னும் 60 நாட்கள் அவகாசம் உள்ளதால், இந்த உடன்படிக்கை நீடிக்குமா மற்றும் இதனால் ஏற்படும் ஒட்டுமொத்த விளைவுகள் என்ன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என அவர் எடுத்துரைத்தார். எனினும், எத்தகைய சூழலிலும் நாட்டின் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்வதையே அரசாங்கம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.

பூடி மடாணி RON95 திட்டத்தின் கீழ் உதவி பெறும் பயனாளர்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் மாதத்திற்கு 200 லிட்டருக்கும் குறைவான எரிபொருளையே பயன்படுத்துகின்றனர் என்ற புள்ளிவிவரத்தைப் பகிர்ந்துகொண்டார். அத்தோடு, பொதுமக்கள் தங்களால் இயன்றவரை பெட்ரோல் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காகவே வீட்டிலிருந்தே பணிபுரியும் (Work From Home) முறைகள் போன்ற பல்வேறு முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், பெட்ரோலைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார அழுத்தத்தை ஓரளவிற்குக் குறைக்க முடியும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.