கோலாலம்பூர், ஜூன் 11 - இன்று முதல் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை வரையிலான ஒரு வார காலத்திற்கு ரோன் 97 (RON97), ரோன் 95 (RON95) மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கும் என நிதி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, தீபகற்ப மலேசியாவில் ரோன் 97 ரக எரிபொருளின் விலை ஒரு லிட்டருக்கு 4 ரிங்கிட் 35 சென், ரோன் 95 விலை ஒரு லிட்டருக்கு 3 ரிங்கிட் 72 சென் என தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.
அதே வேளையில், தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 4 ரிங்கிட் 67 சென் என்ற நிலையிலேயே தற்காப்பதாக நிதி அமைச்சு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
'தானியங்கி விலை நிர்ணய முறைமை' (Automatic Pricing Mechanism) சூத்திரத்தின் கீழ், கடந்த வார உலகளாவிய சந்தையின் சராசரி விலையின் அடிப்படையிலேயே இந்த எரிபொருள் விலைகள் மாற்றமின்றி பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அதே வேளையில், தகுதிப் பெற்ற 14 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்களுக்கான மானிய விலை எரிபொருள் திட்டங்களும் எவ்வித பாதிப்புமின்றி தொடர்கின்றன. 'பூடி 95' (BUDI95) திட்டத்தின் கீழ் தகுதிப் பெற்ற பயனாளிகளுக்கு ரோன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென் என்ற நிர்ணயிக்கப்பட்ட மானிய விலையிலேயே தொடர்ந்து வழங்கப்படும்.
மேலும், சபா, சரவாக் மற்றும் லபுவான் ஆகிய மாநிலங்களில் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென் என்ற மானிய விலையிலேயே நீடிக்கும். தகுதிவாய்ந்த பிரிவினருக்கும் குறிப்பிட்ட துறைகளுக்கும் மானிய விலையிலான எரிபொருளை தொடர்ந்து வழங்குவதில் மடாணி அரசு உறுதியாக இருப்பதை இந்த நடவடிக்கை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
இதனிடையே, மானிய விலையிலான பெட்ரோல் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் (Subsidised Petrol Control System) எரிபொருளின் விலை ஒரு லிட்டருக்கு 2 ரிங்கிட் 5 சென் என்ற அளவிலும், மானிய டீசல் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென் என்ற அளவிலும் மாற்றமின்றி தொடர்கிறது.
இந்த மானிய முறையினால் பொதுமக்கள் அடையும் நன்மைகள் குறித்து நிதி அமைச்சு விளக்குகையில், ஒரு பயனாளி மானியமற்ற சந்தை விலையான 3 ரிங்கிட் 72 சென்னுக்கு 200 லிட்டர் ரோன் 95 பெட்ரோலை வாங்கினால் அதற்கு மொத்தம் 744 ரிங்கிட் செலவாகும். ஆனால், அதே அளவிலான பெட்ரோலை 'பூடி 95' மானிய திட்டத்தின் கீழ் 1 ரிங்கிட் 99 சென்னுக்கு வாங்கும் போது வெறும் 398 ரிங்கிட் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
இதன் மூலம் தகுதிப் பெற்ற ஒரு பயனாளி மாதத்திற்கு சுமார் 346 ரிங்கிட் வரை சேமிக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மானியமற்ற டீசலின் விலையான 4 ரிங்கிட் 67 சென்னுடன் ஒப்பிடுகையில், மானிய விலையான 2 ரிங்கிட் 15 சென் என்பது பாதியளவுக்கும் குறைவான விலையாகும்.
இது பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான போக்குவரத்து மற்றும் தளவாடச் செலவுகளைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது என்றும் நிதி அமைச்சு விவரித்துள்ளது.
தற்போதைய உலகளாவிய விநியோக சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மலேசியாவின் எரிபொருள் விநியோகம் நிலையானதாகவும் போதுமானதாகவும் இருப்பதை அரசு உறுதி செய்துள்ளது.
நீண்ட கால விநியோகப் பாதுகாப்பு மற்றும் இலக்கு நோக்கிய மானிய நடவடிக்கைகளை மடாணி அரசாங்கம் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் வேளையில், உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத் தன்மையை மேம்படுத்தும் நோக்கில், முறையான பயணத் திட்டமிடல் மூலம் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.







