பெட்டாலிங் ஜெயா, ஜூன் 22 - பெட்டாலிங் ஜெயா மாநகரத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழாவின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தேதியில் கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்குப், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி தனது ‘மாநகரக் குழந்தை திட்டத்தின்’ (Program Bayi Bandar Raya) கீழ் பாராட்டும் பரிசுகளும் வழங்கி கௌரவித்துள்ளது.
பெட்டாலிங் ஜெயாவில் வசிக்கும் இலங்கைத் தம்பதியருக்குப் பிறந்த அக்குழந்தைக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சிறப்புப் பரிசு உடன், எம்பிபிஜே (MBPJ) சமூக நூலகத்தின் ஆயுட்கால இலவச உறுப்பினர் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது ஒரு புதிய பிறப்பைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், உள்ளூர் சமூகத்துடனான மாநகராட்சியின் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான எம்பிபிஜேயின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று மாநகர மேயர் டத்தோ முகமட் ஜஹ்ரி சமிங்கோன் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பிறப்பும் ஒரு புதிய நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் குறிப்பதாகக் கூறிய அவர், இந்தத் திட்டத்தின் மூலம் அந்தப் பெற்றோரின் மகிழ்ச்சியில் மாநகராட்சியும் பங்கெடுத்துக் கொள்வதோடு, புதிய தலைமுறையினரிடையே பெட்டாலிங் ஜெயா நகரின் மீதான அன்பையும் விதைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா அதிகாரப்பூர்வமாக மாநகரமாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 97.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த மாநகரம், 8 லட்சத்து 29 ஆயிரத்து 865 மக்கள் தொகையையும், 2 லட்சத்து 92 ஆயிரத்து 680 சொத்துரிமைகளையும் கொண்டுள்ளது.
இந்த 20ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் இன்று ஜூன் 22ஆம் தேதி வரை பொதுமக்கள் அனைவரும் பெட்டாலிங் ஜெயா சமூக நூலகத்தில் இலவசமாக உறுப்பினர் ஆவதற்குக் கூடுதல் சலுகையையும் மாநகராட்சி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.








