சுய-தணிக்கை மேலாண்மை அமைப்பு அறிமுகம் - பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

9 ஜூன் 2026, 7:09 AM
சுய-தணிக்கை மேலாண்மை அமைப்பு அறிமுகம் - பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

ஷா ஆலம், ஜூன் 9 – பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே), தனது கார்ப்பரேட் ஆளுமையை வலுப்படுத்தவும், நிதி மேலாண்மைத் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தவும் ஏதுவாக 'பெட்டாலிங் ஜெயா சுய-தணிக்கை மேலாண்மை அமைப்பு' (Self-Audit Management System Petaling Jaya - SAMS PJ) என்ற புதிய புத்தாக்க டிஜிட்டல் தளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்புதிய அமைப்பின் தொடக்க விழாவை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் நிர்வாகத் துறைத் துணைச் செயலாளர் முகமட் ஃபவ்சி மாரோப் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் உள்நாட்டுத் தணிக்கை மற்றும் நற்பண்புப் பிரிவு (Internal Audit and Integrity Unit) இயக்குநர் ஷாருடின் அலி உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

எம்பிபிஜே கீழ் இயங்கும் ஒவ்வொரு துறையும் தங்களின் செயல்பாடுகளை முன்கூட்டியே தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளும் ஒரு முறையை உருவாக்குவதில் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பை இந்த 'SAMS PJ' தளம் பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த புதிய அமைப்பின் மூலம், மாநகராட்சியின் ஒவ்வொரு துறையும் பிரிவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிதிச் செயல்பாடுகளைச் சுய-தணிக்கை செய்துகொள்ளும் நல்வாய்ப்பைப் பெறுகின்றன.

இது அரசாங்க நிதி விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை மேம்படுத்தவும், உள்நாட்டுக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும், அத்துடன் விதிமீறல்கள் மற்றும் நிதி கசிவு (leakages) ஏற்படுவதற்கான அபாயங்களைக் குறைக்கவும் பெரிதும் உதவும்," என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த 'SAMS PJ' அமைப்பின் முதற்கட்டமாக, செலவின மேலாண்மைக் கட்டுப்பாட்டில் (expenditure management control) முதன்மை கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக 50 சுய-தணிக்கைக் கேள்விகள் (self-auditing questions) வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், மேற்கொள்ளப்படும் அனைத்துச் செலவுகளும் நிதி விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளனவா, போதுமான உள்நாட்டுக் கட்டுப்பாடுகள் உள்ளனவா மற்றும் அவை முறையாகப் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனவா என்பது மிகத் துல்லியமாக உறுதி செய்யப்படும்.

"எதிர்காலத்தில், இத்திட்டம் நிலைகளின் அடிப்படையில் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, பட்ஜெட் கட்டுப்பாடு, கொள்முதல் (procurement), சொத்து மற்றும் கிடங்கு மேலாண்மை, ரசீதுகள், முதலீடுகள் மற்றும் நிதி அறிக்கைகளைத் தயாரித்தல் உள்ளிட்ட நிதி நிர்வாகத்தின் பல்வேறு முக்கிய அம்சங்களை checklist முறையில் உள்ளடக்கியதாக மாற்றியமைக்கப்படும்," என்று மாநகராட்சி மேலும் விவரித்துள்ளது.

இந்த 'SAMS PJ' முறையானது பெட்டாலிங் ஜெயா மாநகராண்மைக் கழக ஊழியர்களிடையே நற்பண்பு (integrity), பொறுப்புக்கூறல் (accountability) மற்றும் சிறந்த நிர்வாகக் கலாச்சாரத்தை மேலும் உன்னத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான ஒரு ஊக்கியாக அமையும் என்று எம்பிபிஜே நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.