ஷா ஆலம், ஜூன் 22 - மக்களின் வாழ்வாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில், சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவித்த 'சிலாங்கூரின் பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தும் திட்டம்' வேலைவாய்ப்புத் துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த திட்டம், மாநிலப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு ஏழை எளிய மக்களின் நலனைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வேலைவாய்ப்புச் சந்தையை மேம்படுத்துவதற்காக 1.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 'சிலாங்கூர் தொழில்முறை திட்டம்' (Program Kerjaya Selangor) அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத்துறை நிர்வாகக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.
இந்தச் சிறப்புத் திட்டம், வேலை தேடுபவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் உட்பட சுமார் 30,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. தற்போது சிலாங்கூர் மாநிலத்தின் வேலைவாய்ப்புச் சந்தை மிகவும் சாதகமான நிலையில் உள்ள நிலையில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
‘மைஃபியூச்சர்ஜாப்ஸ்’ (MYFutureJobs) தரவுகளின்படி, கடந்த ஜூன் 12ஆம் தேதி வரையில் சிலாங்கூரில் பல்வேறு துறைகளில் 160,566 காலியிடங்கள் உள்ளன. அதே வேளையில், அரசின் முறையான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் திட்டங்கள் மூலம் இதுவரையில் 11,347 தனிநபர்கள் வெற்றிகரமாக வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பெர்கேசோ (PERKESO), எம்பிஐ (MBI), இன்வெஸ்ட் சிலாங்கூர் (Invest Selangor) மற்றும் சிலாங்கூர் தொழிலாளர் மேம்பாடு பிரிவு (UPPS) ஆகியவற்றின் கூட்டணியின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது, மக்களுக்குத் தரமான வேலைகளைப் பெற்றுத் தருவதில் மாநில அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
பெர்கேசோ அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் சிலாங்கூரில் 10,869 பேர் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர். இதில் 23.45 விழுக்காட்டினர் சில்லறை வர்த்தகத் துறையையும், 21.3 விழுக்காட்டினர் உற்பத்தித் துறையையும் சேர்ந்தவர்களாவர்.
இருப்பினும், வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையை விட மாநிலத்தில் உள்ள வேலைக் காலியிடங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை. இது மாநிலப் பொருளாதாரத்தின் வலுவான திறனைக் காட்டுவதாக பாப்பாராய்டு சுட்டிக்காட்டினார்.
மாநில மக்கள் இந்த வேலைவாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதை உறுதி செய்ய, 'கார்னிவல் கெர்ஜெயா ஜோப்கேர் சிலாங்கூர்' (Karnival Kerjaya JobCare Selangor) எனும் வேலைவாய்ப்பு முகாம்களை மாநில அரசு தீவிரமாக நடத்தி வருகிறது. 2026ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள 11 முகாம்களில், இதுவரை கோலா லங்காட், பெட்டாலிங் மற்றும் கோம்பாக் ஆகிய மாவட்டங்களில் மூன்று முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு முடிந்துள்ளன.
மேலும், 'சிறப்பு ஜோப்கேர்' (JobCare Istimewa) மற்றும் 'பிரிமியம் ஜோப்கேர்' (JobCare Premium) உட்பட இன்னும் 8 வேலைவாய்ப்பு முகாம்கள் மாநில அளவில் நடத்தப்படவுள்ளன. இந்த ஒவ்வொரு முகாமும் சுமார் 4,500 வேலைவாய்ப்புகளை வழங்குவது குறிப்பிடத்தக்கது.







