நகர்ப்புற & கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் - பாப்பாராய்டு

27 ஜூலை 2026, 9:58 AM
நகர்ப்புற & கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் - பாப்பாராய்டு

ஷா ஆலாம், ஜூலை 27 — நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO) வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.

இரு தரப்பினரின் தேவைகளும் பெருமளவில் வித்தியாசப்படுவதால், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் குறிப்பிட்ட பகுதிகளின் சவால்களைக் கருத்தில் கொண்டு இலக்கு வைத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

நகர்ப்புற வறுமை என்பது உயர்ந்த போக்குவரத்துச் செலவுகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால் தூண்டப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், கிராமப்புற சமூகங்களுக்கு உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு அவசியத் தேவைகளாக உள்ளன என்றார்.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் பொருட்டு, சிலாங்கூர் மாநில அரசு பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பிங்காஸ், ஸ்மார்ட் சேவா (Smart Sewa) வீட்டுவசதித் திட்டம், ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து மற்றும் ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டு போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் உள்ள இந்திய மற்றும் மலாய் சமூகங்கள் மீது மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதிகளில் உள்ள பல குடியிருப்பாளர்கள் தொடக்கப் பள்ளிக் கல்வியை மட்டுமே முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி நிறுவனங்களுக்கான குறைந்த அணுகல் வசதியே, இச்சமூகத்தினரிடையே சமூக இயக்கத்தை மேம்படுத்துவதில் உள்ள முக்கிய சவால்களில் ஒன்றாகத் தொடர்கிறது.

ஓராங் அஸ்லி (Orang Asli) சமூகங்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளவும், உடனடி கவனம் தேவைப்படும் பிரச்சனைகளைக் கண்டறியவும் தனது அலுவலகம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தொடர்ச்சியான களப்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

``ஓராங் அஸ்லி கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கல்விக்கான வாய்ப்பைப் பெறுவதையும், பள்ளியிலிருந்து இடைநிற்பது தவிர்க்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு சிலாங்கூரில் உள்ள அனைத்து 62 (Tok Batin)-க்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

வறுமைச் சுழற்சியை உடைத்தெறிவதற்கான முக்கியப் பாதை கல்வியாகும்; எனவே, ஒவ்வொரு குழந்தையும் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்” என்றார் பாப்பாராய்டு.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.