டூசுன் துவா வெள்ளப் பாதிப்பு: 242 பேருக்கு சிலாங்கூர் மந்திரி புசார் அறவாரியம் நிதியுதவி வழங்கியது

19 மே 2026, 1:38 AM
டூசுன் துவா வெள்ளப் பாதிப்பு: 242 பேருக்கு சிலாங்கூர் மந்திரி புசார் அறவாரியம் நிதியுதவி வழங்கியது

உலு லங்காட், மே 19: சிலாங்கூர், டூசுன் துவா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட 242 பேருக்கு, சிலாங்கூர் மந்திரி புசார் அறவாரியம் (MBI) நிதியுதவி வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில், மொத்தம் 60,000 ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டு, தலா 250 ரிங்கிட் வீதம் இந்த ரொக்க உதவி விநியோகிக்கப்பட்டது.

இங்குள்ள தேசிய இளைஞர் திறன் பயிற்சி கழகத்தில் (IKBN) நடைபெற்ற இந்த வெள்ள நிவாரண நிதி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய எம்.பி.ஐ அறவாரியத்தின் தலைவர் அஹ்மட் அஸ்ரி ஜைனல் நோர், இந்த நிதியுதவியானது பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை சற்று தணிக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

மேலும், இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கும் மக்களோடு சிலாங்கூர் மாநில அரசும் எம்.பி.ஐ அறவாரியமும் எப்போதும் துணையாக இருக்கும் என்பதையே இந்த உதவி நிரூபிப்பதாக அவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்த நிவாரண விநியோகம் குறித்துப் பேசிய டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ வீரா ஜோஹான் அப்துல் அஜீஸ், இம்முறை மொத்தம் 11 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த உதவியைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் தங்களின் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்சார சாதனங்களை இழந்து தவித்த வேளையில், இந்த உதவி அவர்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது என்று தெரிவித்த அவர், நூற்றுக்கணக்கான மக்களின் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக உதவிய எம்.பி.ஐ அறவாரியத்திற்கும் அதன் தலைவர் அஹ்மட் அஸ்ரிக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதற்கு முன்னதாக, வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருந்தபோது, சமூக நலத்துறையோடு இணைந்து அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், படுக்கை வசதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கூடைகளை எம்.பி.ஐ அறவாரியம் தங்குதடையின்றி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.