கோலாலம்பூர், ஜூன் 22 - மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள வங்காளதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு, புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று காலை 9 மணியளவில் பெர்டானா புத்ரா வளாகத்தை வந்தடைந்த அவரைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரில் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, பெர்டானா புத்ராவின் விருந்தினர்கள் புத்தகத்தில் கையெழுத்திட்ட பிரதமர் தாரிக் ரஹ்மான், தொடர்ந்து பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் இருதரப்பு தனிப்பட்ட சந்திப்பில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, மலேசியா மற்றும் வங்காளதேசம் இடையிலான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததுடன், வர்த்தகம் மற்றும் முதலீடு, மனிதவள மேலாண்மை, குறைக்கடத்தி, எரிசக்தி, விவசாயம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும், இருதரப்பு நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் கலாச்சார ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமும், பயங்கரவாத எதிர்ப்பு ஆராய்ச்சி மற்றும் முதலீட்டு மேம்பாடு தொடர்பான இரண்டு குறிப்பாணைகளும் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் தாரிக் ரஹ்மானின் வருகையைக் கௌரவிக்கும் வகையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வ மதிய விருந்தளித்து உபசரிக்கவுள்ளார்.
இந்த அதிகாரப்பூர்வப் பயணத்தில் பிரதமர் தாரிக் ரஹ்மானுடன் அவரது மனைவி டாக்டர் ஜுபைதா ரஹ்மான், வெளியுறவு அமைச்சர் டாக்டர் கலிலுர் ரஹ்மான் மற்றும் வங்காளதேச மூத்த அரசு அதிகாரிகளும் மலேசியா வந்துள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டில், மலேசியா மற்றும் வங்காளதேசம் இடையிலான ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு 12.18 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகியிருந்தது. இதில் மலேசியாவிலிருந்து வங்காளதேசத்திற்கான ஏற்றுமதி மதிப்பு 10.08 பில்லியன் ரிங்கிட் ஆகும், குறிப்பாகப் பெட்ரோலியப் பொருட்கள் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக விளங்கியது.
அதே வேளையில், வங்காளதேசத்திலிருந்து மலேசியாவிற்கான இறக்குமதி மதிப்பு 2.10 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது, இதில் ஆடைகள் மற்றும் காலணிகள் முக்கியப் பங்கு வகித்தன.
உலக அளவில் மலேசியாவின் 28ஆவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கும் வங்காளதேசம், தெற்காசியாவில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக மலேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், முக்கிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நாடாகவும் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.







