குறைந்தபட்ச ஊதியத்தை RM1,700க்கு மேல் உயர்த்துவதற்கு அரசு தயார்

28 நவம்பர் 2025, 3:44 AM
குறைந்தபட்ச ஊதியத்தை RM1,700க்கு மேல் உயர்த்துவதற்கு அரசு தயார்

ஷா ஆலம், நவ 27: எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார நிலை மேலும் வலுபெற்றால், குறைந்தபட்ச ஊதியத்தை RM1,700க்கு மேல் உயர்த்துவதற்கு அரசு தயாராக உள்ளது.

பணியாளர்கள் தற்போது பெறும் RM1,700 குறைந்தபட்ச ஊதியம் அவர்களின் தினசரி செலவுகளை சமாளிக்க போதுமானதாக இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் என பெரித்தா ஹாரியன் கூறுகிறது.

“முன்பு, நாம் அரசு பொறுப்பேற்கும் முன், குறைந்தபட்ச ஊதியம் RM1,200. பின்னர் அதை RM1,500 ஆக உயர்த்தினோம்.

“கடந்த ஆண்டு, அதை RM1,700ஆக அதிகரித்தோம். அது போதுமானதா? இல்லை. நமது பொருளாதாரம் வலுபெற்ற உடனே, அதை மீண்டும் உயர்த்துவேன்,” என்று அவர் கோத்தா கினாபாலுவில் நடைபெற்ற Townhall PMX Bersama Anak Muda Inanam நிகழ்ச்சியில் கூறினார்.

சபாவில் குறைந்தபட்ச ஊதியம் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், அரசு சார்ந்த நிறுவனங்கள் (GLC) தங்களது பணியாளர்களின் நலனை உறுதி செய்ய குறைந்தபட்ச ஊதியத்தை RM3,100ஆக நிர்ணயித்து ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைத்துள்ளன என்றும் அவர் எடுத்துக்காட்டினார்.

“பெட்ரோனாஸ், அரசாங்க வங்கிகள், டெலிகோம், TNB போன்ற அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் நமக்கு முழு அதிகாரம் இருந்தால், குறைந்தபட்ச ஊதியம் RM3,100ஆக நிர்ணயிக்கப்படும். அதுதான் நாம் விரும்புகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

அரசு முன்னதாகவே உயரும் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சராகவும் பதவி வகிக்கும் அன்வார், சபாவில் சில துறைகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனினும், சபா மாநில பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதிய உயர்வில் பின்தங்காமல் இருக்க மறுபரிசீலனை மற்றும் கலந்துரையாடலுக்கு அரசு தயாராக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.