ஷா ஆலம், ஜூன் 19: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் மோதல்களால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, சிலாங்கூர் மாநில அரசு 'சிலாங்கூர் மீள்திறன் வலுவூட்டல் தொகுப்பின்' 1-ஆம் மற்றும் 2-ஆம் கட்டங்களின் கீழ் மொத்தம் 355.06 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த மொத்தத் தொகையில், தற்போது ஏழு முக்கிய முன்னெடுப்புகளுடன் அமலாக்கத்தில் இருக்கும் முதற்கட்டத் திட்டத்திற்காக 145.8 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டு வருவதாகச் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 15 திட்டங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்டத்திற்காக 209.26 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் இத்திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றிய மந்திரி பெசார், மாநில அரசு முறையான தரவுகள், துல்லியமான தகவல்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் திட்டங்களை வகுத்துள்ளது என்றும், இதற்காகப் பல ஆய்வரங்குக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு அடிப்படைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன என்றும் அவர் விளக்கமளித்தார்.
இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில், நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமின்றி, மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் அரசாங்கத்திற்கு மிகவும் தேவைப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
திட்டமிடப்பட்டுள்ள ஒவ்வொரு நடவடிக்கைகளும், பரிந்துரைகளும் முறையாக விவாதிக்கப்பட்டு, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதிர்ச்சியான முறையில் மதிப்பிடப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தச் சிறப்புக் கூட்டத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமிருடின் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய மற்றும் எதிர்காலச் சவால்களைச் சமாளிப்பதற்கான மிகச் சரியான உத்திகளை அடையாளம் காண இந்த அணுகுமுறை மிகவும் அவசியமானது என்று அவர் கூறினார்.
இதற்கென அமைக்கப்பட்ட சிறப்புக் பணிக்குழு நடத்திய கலந்தாய்வுக் கூட்டங்களின் வாயிலாகப் பல கோரிக்கைகள் வந்தபோதிலும், நிதி வரம்புகளுக்கு உட்பட்டே தங்களால் செயல்பட முடிந்ததாக மந்திரி பெசார் குறிப்பிட்டார்.
எனவே, இன்றைய இந்த ஆதரவு என்பது வெறும் நிதியுதவி வழங்குவதோடு அல்லது மக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், சில்லறை வர்த்தகம், விவசாயத் துறை மற்றும் அதன் சார்ந்த சங்கிலித் தொடர் அமைப்புகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
இதன் மூலம் சிலாங்கூரின் பொருளாதாரத் போட்டித்திறன் நிலைநிறுத்தப்படுவதோடு, மலேசியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் இன்னும் சிறந்த திசையை நோக்கி நகர்த்த முடியும் என தெரிவித்தார்.






