வேலை இழந்த 5,000 சிலாங்கூர் மக்களுக்குப் புதிய வாழ்வாதாரம்: 'பிளாட்ஸ்' (PLATS) தொழில்முனைவோர் திட்டத்திற்கு 4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

19 ஜூன் 2026, 4:48 AM
வேலை இழந்த 5,000 சிலாங்கூர் மக்களுக்குப் புதிய வாழ்வாதாரம்: 'பிளாட்ஸ்' (PLATS) தொழில்முனைவோர் திட்டத்திற்கு 4 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூன் 19: நடப்பு ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்தில் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்த 5,000 தொழிலாளர்கள், தொழில்முனைவோர் துறையில் கால்பதிப்பதற்கான புதிய வாய்ப்பை சிலாங்கூர் மாநில அரசு உருவாக்கியுள்ளது.

இதற்கென 'பிளாட்ஸ் தொழில்முறை உருமாற்றத் திட்டத்தின்' (Transisi Kerjaya PLATS) கீழ் 4 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும், புதிதாக வணிகம் தொடங்க ஆர்வமாக உள்ளவர்களுக்கும் அடிப்படைத் தொழில்முனைவோர் உத்திகளைக் கற்றுக்கொடுத்து, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில், 'சிலாங்கூர் மீள்திறன் வலுவூட்டல் தொகுப்பு` தொகுப்பைச்' சமர்ப்பித்து உரையாற்றிய மந்திரி பெசார், இந்த ஆண்டில் சிலாங்கூரில் வேலை இழந்த சுமார் 10,000 குடிமக்களில், முதற்கட்டமாக 5,000 பேருக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை இடங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பங்கேற்பாளர்கள் டிஜிட்டல் தளங்களை எளிதாக அணுகவும், பயிற்சித் தொகுப்புகளைப் பயிலவும், வணிகத்திற்கான நிதியுதவிகளுக்கு விண்ணப்பம் செய்யவும் ஏதுவாக அவர்களுக்கு 12 மாத காலத்திற்கு இலவச இணையத் தரவு (Internet Data) உதவி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இப்பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பங்கேற்பாளரின் வாழ்வாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில், அவர்களுக்குப் பயணக் கொடுப்பனவும் (Travel Allowance) வழங்கப்படும் என்று அமிருடின் தெரிவித்தார்.

மேலும், பங்கேற்பாளர்கள் அனைவரும் 'பிளாட்ஸ்' நிர்வாகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் முறையான பயிற்சிகள் மற்றும் வணிக உத்திகள் மூலம் வழிநடத்தப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் அவர்கள் தங்களது வணிகத்தை இன்னும் விரிவுபடுத்துவதற்கான பரந்த வணிகச் சூழல் அமைப்புடன் (Business Ecosystem) இணைக்கப்படுவார்கள் என்றும் அவர் விவரித்தார்.

மாநிலத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, சிலாங்கூர் மக்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்குக் தொழில்முனைவோர் துறையில் ஈடுபட உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது என்று மந்திரி பெசார் வலியுறுத்தினார்.

அதன் அடிப்படையிலேயே, வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கும், புதிய தொழிலதிபராக மாறத் துடிப்பவர்களுக்கும் அடிப்படைத் தொழில் உத்திகளைப் புகட்டும் இந்தச் சிறப்புப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, இந்தச் 'சிலாங்கூர் மேம்பாட்டுத் தொகுப்பின் 2-ஆம் கட்டமானது' மேற்கு ஆசியப் போர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத் துணைத் துறைகளைப் பாதுகாப்பதோடு, தற்போதைய பொருளாதாரச் சவால்களை மக்கள் தைரியமாக எதிர்கொள்ள உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமிருடின் சுட்டிக்காட்டினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.