ஷா ஆலம், ஜூன் 19: மலேசியாவில் உள்ள பதின்ம வயதினரிடையே மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற அறிகுறிகள் கணிசமாக அதிகரித்து வருவது தற்பொழுது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பதின்ம வயதினரில் கால் பங்கிற்கும் அதிகமானோர் இத்தகைய மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 முதல் 17 வயதுக்குட்பட்ட மலேசியப் பதின்ம வயதினரில் 26.9 சதவீதத்தினர் மனச்சோர்வுக்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக தேசிய சுகாதார மற்றும் நோயுற்ற தன்மை ஆய்வு (NHMS) சுட்டிக்காட்டியுள்ளதாக சிலாங்கூர் மாநில பொதுச் சுகாதாரத்துறை நிர்வாகக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வயதினரில் 13.1 சதவீதத்தினர் தற்கொலை எண்ணங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், 9.5 சதவீதத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
'பியர்ஸ்' (PeerZ) பதின்ம வயதினர் மனநல விழிப்புணர்வு முன்னோடித் திட்ட விழாவின் தொடக்க உரைய ஆற்றுகையில் ஜமாலியா இக்கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
தற்கால இளைஞர்கள் எதிர்கொள்ளும் உணர்வுபூர்வமான அழுத்தங்கள் நாளுக்கு நாள் மிகவும் சிக்கலானதாக மாறி வருகின்றன. குடும்பப் பின்னணி, சமூகச் சூழல் மற்றும் இன்றைய டிஜிட்டல் உலகின் சவால்கள் ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
குறிப்பாக, பள்ளி மற்றும் சமூகத்தில் நடக்கும் பகடிவதைகள் (Bullying), இணையப் பகடிவதைகள் (Cyberbullying) மாணவர்களின் மனநலத்திற்கும் அவர்களின் உணர்வுப்பூர்வமான நல்வாழ்விற்கும் இன்னும் பெரும் அச்சுறுத்தலாகவே நீடித்து வருகின்றன.
இத்தகைய நீண்டகால மன அழுத்தங்கள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு தீர்க்கப்படாவிட்டால், அது பதின்ம வயதினரின் தன்னம்பிக்கை, கல்வித் திறன் மற்றும் சமூக உறவுகளைப் பாதிக்கும் என்று ஜமாலியா எச்சரித்துள்ளார்.
இதே வேளையில், உதவி தேவைப்படும் பல பதின்ம வயதினர், தங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் இன்னும் பல தடைகளை எதிர்கொண்டு வருவதாக ஜமாலியா சுட்டிக்காட்டினார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐநா சபையின் சிறுவர் நிதியமான யுனிசெஃப் (UNICEF) மலேசியா அமைப்பும் ஒரு கருத்தை முன்வைத்துள்ளது. மனநல உதவி தேவைப்படும் பல சிறுவர்களும் பதின்ம வயதினரும் இன்னும் முறையான உதவிகளைப் பெறாமல் தவித்து வருவதாக அது கவலை தெரிவித்துள்ளது.
சமுதாயத்தில் நிலவும் மனநலம் சார்ந்த அவப்பெயர்கள், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் மனநலச் சேவைகளை எளிதாக அணுக முடியாத பற்றாக்குறை ஆகியவையே இந்த அவல நிலைக்கு முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன.
எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையை மாற்றியமைக்க, மனநலம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் கல்வித் திட்டங்கள் சமூகத்தில் இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று ஜமாலியா கேட்டுக்கொண்டார்.
அப்போதுதான், நம் நாட்டு இளைஞர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் உணர்வுபூர்வமான மற்றும் உளவியல் ரீதியான சிக்கல்களின் போது, எவ்வித தயக்கமுமின்றி, முழுத் துணிச்சலோடு முன்வந்து உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகும் என்றார்.







