இளம் வயதிலேயே மருத்துவக் காப்பீடு - குறைந்த பிரீமியம், நீண்டகால நிதிப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்

8 ஜூன் 2026, 1:20 AM
இளம் வயதிலேயே மருத்துவக் காப்பீடு - குறைந்த பிரீமியம், நீண்டகால நிதிப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்

ஷா ஆலம், ஜூன் 8 – இளைஞர்கள் தங்களின் ஆரோக்கியமான இளம் வயதிலேயே மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை எடுப்பது மிகவும் சாதகமானது என்றும், ஏனெனில் இக்காலகட்டத்தில் அதற்கான காப்பீட்டுப் பிரீமியம் (premium) கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கும் என்றும் பேங்க் முஅமலாத் மலேசியா நிறுவனத்தின் தலைமைப் பொருளியல் நிபுணர் டாக்டர் முகமட் அஃப்சானிசாம் அப்துல் ரசீட் தெரிவித்துள்ளார்.

தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருத்துவச் சிகிச்சைச் செலவுகள் பொதுமக்களுக்குப் பெரும் சுமையாக மாறி வருவதைக் குறிப்பிட்ட அவர், இந்தச் செலவின உயர்வு நாட்டின் வழக்கமான பணவீக்க விகிதத்தை விடவும் மிக அதிவேகமாக உயர்ந்து வருவதாகக் கூறினார்.

எனவே, போதிய மருத்துவப் பாதுகாப்பு இல்லாத தனிநபர்களின் நிதி நிலையில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இளம் வயதிலேயே காப்பீடு எடுப்பது ஒரு சிறந்த நீண்டகால நிதி உத்தரவாதமாக அமையும் என்று அவர் விவரித்தார்.

இது குறித்து மேலும் பேசிய டாக்டர் அஃப்சானிசாம், "நாட்டின் இளைஞர்கள் தங்களின் இளமை மற்றும் ஆரோக்கியத்தின் காரணமாக மருத்துவக் காப்பீட்டைப் பெறுவதற்கு மிகச் சிறந்த சூழலில் இருக்கிறார்கள்.

பொதுவாக இந்த வயதினருக்கு உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அல்லது இதய நோய் போன்ற தொற்றா நோய்களின் பாதிப்புகள் இருக்காது என்பதால், காப்பீட்டு நிறுவனங்கள் இவர்களுக்கான உடல்நல அபாயக் குறியீட்டைக் குறைவாகக் கருதி குறைந்த கட்டணத்தில் காப்பீடுகளை வழங்குகின்றன," என்று விளக்கினார்.

இருப்பினும், தற்போதைய காலகட்டத்தில் நிலவும் வேலை அழுத்தம், போதிய உடற்பயிற்சியின்மை போன்ற இளைஞர்களின் மாறிவரும் வாழ்வியல் முறைகளால், தற்போதைய ஆரோக்கியம் அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு முழுமையான உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

அதே வேளையில், மருத்துவக் காப்பீடு என்பது வெறும் சிகிச்சைச் செலவுகளை ஈடுசெய்வது மட்டுமல்லாமல், அது ஒரு தனிமனிதனின் நீண்டகால நிதித் திட்டமிடலின் மிக முக்கிய அங்கம் என்றும் டாக்டர் அஃப்சானிசாம் தெளிவுபடுத்தினார்.

தகுந்த காப்பீடு இல்லாத சிலர், தங்களின் திடீர் மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பதற்காகத் தங்களின் சொத்துகளை விற்க நேரிடுகிறது அல்லது புதிய கடன்களை வாங்குகிறார்கள்; இன்னும் சிலர் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி நிதியைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று அவர் கவலை தெரிவித்தார்.

இத்தகைய சூழல்கள், குறிப்பாக நோய்வாய்ப்பட்டு வேலை செய்ய முடியாமல் வருமானத்தை இழக்கும் தறுவாயில், சம்பந்தப்பட்ட நபருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கடுமையான மன உளைச்சலை உண்டாக்கிவிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வருமானம் முற்றிலும் முடங்கும்போது நிதி அபாயங்கள் உருவெடுக்கும் என்றும், சிகிச்சைக்காகச் சிலர் தங்களின் ஓய்வூதியச் சேமிப்பைப் ப்யன்படுத்த வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலைக்கு ஆளாகிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

எனவே, பொதுமக்கள் தங்களுக்குப் பொருத்தமான காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகச் சில முக்கிய அம்சங்களைத் தீர ஆராய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக, காப்பீட்டின் ஆண்டு வரம்பு (annual limit), ஒட்டுமொத்தப் பாதுகாப்பு வரம்பு, காப்பீட்டின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள நோய்கள் மற்றும் சிகிச்சைகளின் வகைகள், அதே போல் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் (panel hospitals) பட்டியல் ஆகியவற்றை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும் என்றார்.

இவற்றுடன், தங்களின் காப்பீட்டுப் பாதுகாப்பானது பாதியிலேயே முடங்கிவிடாமல் இருக்க, நீண்டகால அடிப்படையில் அந்தப் பிரீமியம் தொகையைத் தங்களால் தொடர்ந்து செலுத்த முடியுமா என்ற தங்களின் சொந்த நிதித் தகுதியையும் கணக்கில் கொண்டு, காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி டாக்டர் அஃப்சானிசாம் தனது ஆலோசனைகளை நிறைவு செய்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.