ஜகார்த்தா, ஜூன் 18 - தென்கிழக்கு ஆசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் பயன்பாட்டில் நிலவும் சமச்சீரற்ற நிலை, நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் சமூக இடைவெளிகளை மேலும் அதிகரித்துவிடும் என்று இந்தோனேசியா எச்சரித்துள்ளது.
இதனைத் தடுக்கும் பொருட்டு, ஆசியான் நாடுகளுக்கான பொதுவான ஏஐ (AI) தொழில்நுட்ப நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், உலகளாவிய போட்டிகளை எதிர்கொள்ளும் ஆற்றலை வலுப்படுத்தவும் உதவும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று இந்தோனேசியத் தகவல் மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சர் மியூட்டியா ஹஃபித் தெரிவித்துள்ளார்.
எனினும், முறையான கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகள் இல்லாவிட்டால், இது பெரும் ஆபத்துகளையும் விளைவிக்கக் கூடும் என்று அவர் எச்சரித்தார்.
தற்போது நடைபெற்று வரும் 'ஆசியப் பொருளாதார உச்சி மாநாடு 2026'-இல் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மியூட்டியா ஹஃபிட், ஆசியான் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவான ஏஐ நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், இத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் வாய்ப்புகளையும் சவால்களையும் கூட்டாக எதிர்கொள்ள முடியும் என்றார்.
இந்தத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் சமமற்ற நிலை தொடருமானால், அது நாடுகளுக்கு உள்ளேயும், ஆசியான் நாடுகளுக்கு இடையேயும் வசதி படைத்தவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் ஆழமாக்கிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது இந்தோனேசியாவிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகப் பொதுவான அச்சுறுத்தலாகும் என்றும் அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் வேளையில், அதற்கான தரவுகள் (Data) மிகவும் மதிப்புமிக்கதாக மாறுவதோடு, சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.
எனவே, தரவுகளின் மீதான கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதும், உள்ளூர் மொழிகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் புரிந்து கொள்ளும் வகையிலான ஏஐ மாதிரிகளை (AI Models) உருவாக்குவதும் மிக அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கங்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை முடக்குவதற்கு முயலாமல், அதற்குப் பதிலாக வியூக ரீதியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மியூட்டியா ஹஃபிட் ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.







