ஜகார்த்தா, ஜூன் 10: இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள லெவோடோபி லாகி-லாகி (Mount Lewotobi Laki-Laki) எரிமலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கடுமையான சீற்றத்துடன் காணப்படுவதால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்தத் தொடர் எரிமலை வெடிப்பு காரணமாகப் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த உள்ளூர் விமான நிலையம் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
புளோரஸ் தீவில் அமைந்துள்ள இந்த எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ச்சியாக வெடித்துச் சிதறி, வானத்தை நோக்கிப் பெரும் சாம்பல் புகையைக் கக்கி வருவதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் எரிமலையியல் அமைப்பின் தகவல்படி, நேற்று மட்டும் எட்டு முறை எரிமலை வெடிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், நேற்று குறைந்தது ஆறு முறை எரிமலை சீறியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தீவிரச் செயல்பாட்டின் காரணமாக, இந்தோனேசியாவின் இரண்டாவது மிக உயர்ந்த எரிமலை எச்சரிக்கை நிலையின் கீழ் இந்த மலை தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது.
எரிமலையைச் சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் நுழையக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், கனமழை பெய்யும் பட்சத்தில் எரிமலைக் கழிவுகளுடன் கலந்து ஓடிவரும் அபாயகரமான லாகர் (Lahar) எனப்படும் சேற்றுப் பாய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எரிமலையிலிருந்து வெளியான சாம்பல் காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டிருந்த, எரிமலைக்கு மேற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள உள்ளூர் விமான நிலையம், நேற்று காலை முதல் மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கியுள்ளது.
பசிபிக் நெருப்பு வளையம் (Ring of Fire) என்று அழைக்கப்படும் நில அதிர்வு மற்றும் எரிமலைக் கோட்டின் மீது அமைந்துள்ள இந்தோனேசியா, உலகிலேயே அதிக எரிமலைச் செயல்பாடுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.







