பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சபாவில் அதிர்வுகள் உணரப்பட்டன

8 ஜூன் 2026, 1:45 AM
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சபாவில் அதிர்வுகள் உணரப்பட்டன

பெய்ஜிங், ஜூன் 8 – பிலிப்பைன்ஸ் தீவுப் பிராந்தியத்தில் இன்று காலை மலேசிய நேரப்படி 7.37 மணியளவில் 7.9 ரிக்டர் அளவில் மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகச் சீனா நிலநடுக்க நெட்வொர்க் மையம் (CENC) தெரிவித்துள்ளது என சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, வட அட்சரேகை 5.55 பாகையிலும், கிழக்கு தீர்க்கரேகை 125.1 பாகையிலும் பதிவாகியுள்ளது.

இவ்விவகாரம் குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸின் கொரோனடால் நகரத்திலிருந்து தெற்கே சுமார் 97 கிலோமீட்டர் தொலைவில், 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த அதிர்வுகளின் தாக்கம் அண்டை நாடான மலேசியாவின் சபா மாநிலத்திலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாகச் சபாவின் தாவாவ், செம்பூர்ணா மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இது குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின் வானிலை முகமை, அந்நாட்டின் கிழக்கு பசிபிக் கடற்கரையில் உள்ள இபராகி மாகாணம் முதல் தெற்கே உள்ள ஒகினாவா மாகாணம் வரையிலான கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மறுபுறம் ஜகார்த்தாவில், இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமை இன்று காலை அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள இந்த அதிபயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக, இந்தோனேசியாவின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளுக்கு முன்கூட்டிய சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.