பாலு, ஜூன் 16 – இன்று இந்தோனேசியாவின் மத்திய சுலாவேசி (Central Sulawesi) மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் அல்லது கடுமையான பொருள் சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இன்று காலை உள்ளூர் நேரப்படி 10.27 மணியளவில் (மலேசிய நேரப்படி காலை 11.27) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலாவேசி மாகாணத்தின் பாலு (Palu) நகருக்குத் தென்கிழக்கே இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாலு மற்றும் சிகி (Sigi) ஆகிய பகுதிகளில் உள்ள மக்களால் மிக வலுவாக உணரப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி (Tsunami) ஏற்படுவதற்கான எவ்வித ஆபத்தும் அல்லது அச்சுறுத்தலும் இல்லை என்று இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) தெளிவுபடுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தீவுக்கூட்ட நாடான இந்தோனேசியா, பசிபிக் பெருங்கடலின் "நெருப்பு வளையம்" (Ring of Fire) எனப்படும் நில அதிர்வுப் பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டில் இதே பாலு நகரில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவில் பதிவான மிக மோசமான நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரழிவின் காரணமாக 2,200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






