ஷா ஆலம், ஜூன் 18 - எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் 22-ஆவது மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா 2026) பங்கேற்பதற்காகத் தங்கள் நாட்டின் விளையாட்டுக் குழுவை அனுப்பவிருப்பதை புரூணை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
புரூணையின் பண்டார் ஸ்ரீ பகவானுக்கு இன்று அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்ட சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி, அம்மாநிலப் பண்பாடு, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பெங்கிரான் டத்தோ ஸ்ரீ செத்தியா ஷம்ஹாரி பெங்கிரான் முஸ்தபாவைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது இம்முடிவு தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக முகமட் நஜ்வான் ஹலிமி குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் நெருங்கிய நட்புறவின் அடையாளமாகவும், இருதரப்பு இளம் விளையாட்டு வீரர்களின் ஆற்றலை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் சுக்மா போட்டிகளுக்குத் தங்களின் வீரர்களை அனுப்ப புரூணை ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தங்களுக்கு முழு ஆதரவளித்த புரூணை அமைச்சருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், புரூணையின் வருகையோடு சேர்த்து நடப்பு சிலாங்கூர் சுக்மா தொடரில் பங்கேற்கும் ஒட்டுமொத்த விளையாட்டுக் குழுக்களின் எண்ணிக்கை 15-ஆக நிறைவடைந்துள்ளது என்றார்.
இதற்கு முன்னதாக, சரவாக்கில் நடைபெற்ற 2024 சுக்மா போட்டியில் புரூணை அணி வூஷூ (Wushu) பிரிவில் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றிருந்தது. அதே வேளையில், 2022 கோலாலம்பூர் பதிப்பில் அந்த அணி இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புரூணை அணி இப்போட்டியில் பங்கேற்பது, விளையாட்டுத் தரத்தை மேலும் உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், பிராந்திய அளவிலான ஒத்துழைப்பையும், இருதரப்பிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் சுமுக உறவையும் மேலும் வலுப்படுத்த உதவும் என்று நஜ்வான் நம்பிக்கை தெரிவித்தார்.
இம்முறை சிலாங்கூர் சுக்மா போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 24 வரை நடைபெறவுள்ளன.







