ஷா ஆலம், ஜூன் 12: சிலாங்கூர் மாநிலம் நடத்தவிருக்கும் 2026 சுக்மா (SUKMA) தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் தற்போது அதன் இறுதிப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. ஒட்டுமொத்த முன் ஏற்பாடு பணிகள் சுமார் 95 விழுக்காட்டை எட்டியுள்ளதாகச் சுக்மா செயலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமட் யாசிட் சைரி தெரிவித்துள்ளார்.
இந்த முன்னேற்றமானது, தளவாடங்கள் (Logistics), போட்டி மேலாண்மை அமைப்பு, அத்துடன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள விளையாட்டு அரங்குகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறந்த நிலையில் இருப்பதை நேரில் கண்டு உறுதி செய்வதற்காகக் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.
விளையாட்டுப் போட்டிகளுக்கான மதிப்பெண் முறைமை, தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத் தயாரிப்புகளும் கிட்டத்தட்ட முழுமையாக நிறைவடைந்துள்ளன.
விளையாட்டு அமைப்புகளிடமிருந்து பெறப்பட வேண்டிய அங்கீகாரச் சான்றிதழ்கள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த ஏற்பாடுகளும் மிகத் திருப்திகரமான மட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மாநில விளையாட்டு மன்றத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் சிலாங்கூர் மாநிலப் பிரதிநிதிகளாகக் களம் இறங்கவிருக்கும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்த முதன்மைப் போட்டியில் தங்களின் சிறந்த திறமையை வெளிப்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கில், நமது மாநில வீரர்கள் பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றுத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர் என்று அவர் விவரித்தார்.
22-ஆவது சுக்மா (SUKMA) விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 24 வரையிலும், அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா சுக்மா' (PARA SUKMA) போட்டிகள் செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரையிலும் நடைபெற அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
இம்முறை சிலாங்கூரின் 9 மாவட்டங்களில் உள்ள 52 விளையாட்டு மையங்களில் 37 விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 469 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதே வேளையில், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள பாரா சுக்மா தொடரில் 10 விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 316 போட்டிகள் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.







