வாஷிங்டன், ஜூன் 18: நினைவுச் சில்லுகளின் (Memory Chip) விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதை அடுத்து, ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்தத் திட்டமிட்டிருப்பதாக அதன் தலைமைச் செயல் முறை அதிகாரி டிம் குக் தெரிவித்தார்.
"துரதிர்ஷ்டவசமாக, விலையேற்றத்தைத் தவிர்ப்பது இனி சாத்தியமற்றது," என்று 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' (Wall Street Journal) நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.
விலையேற்றத்தின் சுமை வாடிக்கையாளர்களைப் பாதிக்காத வண்ணம் நிறுவனம் இதுவரை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகவும், ஆனால் தற்போதையச் சூழல் அதற்கு மேல் "தாங்க முடியாத" நிலையை எட்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களை (Data Centers) மேம்படுத்தி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களிடன் அபரிமிதத் தேவையே, இந்த நினைவு சில்லுகள் மற்றும் சேமிப்பகக் கூறுகளின் (Storage Components) விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.
மேலும், 'டிஇராம்' (DRAM) மற்றும் 'நேன்ட்' (NAND) சில்லுகளுக்கான அதிகப்படியான தேவை காரணமாக, மின்னணு சாதன உற்பத்தியாளர்களுக்கு இடையே அச்சில்லுகளை வாங்குவதில் கடுமையான போட்டி நிலவியிருக்கின்றது. இதன் விளைவாகவே உலக சந்தையில் இவற்றின் விலை மிகக் குறுகிய காலத்தில் பன்மடங்கு உயர்ந்திருக்கின்றது.







