செலாயாங், ஜூன் 18 - 2025 எஸ்டிபிஎம் (STPM) தேர்வு முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட வேளையில், CGPA 4.00 பெற்று 1,336 மாணவர்கள் மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.
இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 70 மாணவர்கள் கூடுதலாகும். மாணவர்களின் இந்தச் சிறந்த தேர்ச்சியானது, தேசிய அளவிலான தரப்புள்ளி சராசரியை (PNGK Nasional) 2.85-லிருந்து 2.88-ஆக உயர்த்துவதற்குக் காரணியாக அமைந்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டில் எஸ்டிபிஎம் தேர்வுக்குரிய பருவ முறை (Sistem Penggal) அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு, பதிவான மிக உயர்ந்த தேசியத் தரப்புள்ளி சராசரி இதுவே ஆகும் என்று மலேசியத் தேர்வுக் வாரியத்தின் (MPM) தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் அமின் முகமட் டாஃப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
2013-ஆம் ஆண்டில் பதிவான 2.57 புள்ளிகளுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு முடிவுகள் 12.06 விழுக்காடு கூடுதலான வளர்ச்சியைக் காட்டியுள்ளன என்றார். முழுத் தகுதிப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் விகிதமும் கடந்தாண்டின் 3.06 விழுக்காட்டிலிருந்து இம்முறை 3.50 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
மேலும், தேர்வு எழுதிய மாணவர்களில் 99.96 விழுக்காட்டினர், அதாவது 38,128 மாணவர்கள் தங்களின் எஸ்டிபிஎம் சான்றிதழைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







