மாஸ்கோ: ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது திட்டமிடப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல் என அந்நாட்டின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
குட்ரின்ஸ்காயா சதுக்கத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில், கையால் செய்யப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த வெடிபொருளை உணவகத்திற்குள் கொண்டு சென்ற பெண், அவரைத் தடுக்க முயன்ற உணவகப் பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாடிக்கையாளர் ஒருவரும் இதில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் வெவ்வேறு அளவிலான காயங்களுடன் 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்த தடவியல் நிபுணர்கள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ரஷ்யா கடந்த காலங்களில் பல பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, 2022-ஆம் ஆண்டு உக்ரைன் போரின் தொடக்கத்திற்குப் பிறகு, ரஷ்ய ராணுவ அதிகாரிகள் மற்றும் போருக்கு ஆதரவளிக்கும் முக்கிய நபர்களை இலக்கு வைத்து பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.







