கோலாலம்பூர், பிப் 1 - வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றதாக நம்பப்படும் கேப்டன் பிரபா கும்பலின் மீதமுள்ள உறுப்பினர்களைக் காவல்துறையினர் இன்னும் தேடி வருவதாகப் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
அந்தக் குழுவை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த குழுவின் தலைவர் உட்பட சந்தேகநபர்கள் சட்டவிரோத எல்லை வழிகள் (lorong tikus) மூலம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகக் காவல்துறை நம்புகின்றனர்.
“நீங்கள் ஓடலாம், ஆனால் காவல்துறையிடமிருந்து தப்பிக்க முடியாது. நாங்கள் உங்களைத் தேடி கண்டுபிடிப்போம்,” என செய்தியாளர்களிடம் குமார் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், இந்தியா மற்றும் தாய்லாந்தை தஞ்ச இடங்களாகப் பயன்படுத்தியதாக நம்பப்படும் பிரபா கும்பலின் உறுப்பினர்களை காவல்துறையினர் OP Jack Sparrow நடவடிக்கையின் கீழ் தேடி வருகின்றனர்.
அந்த குழுவைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டனர். ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழைய முயன்றது தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கடந்த புதன்கிழமை நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பின் சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


