கேடிஎம்பி பயணிகள் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே இரயில் நிலையங்களுக்கு வர அறிவுறுத்தல்

20 மார்ச் 2026, 2:39 AM
கேடிஎம்பி பயணிகள் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே இரயில் நிலையங்களுக்கு வர அறிவுறுத்தல்

கோலாலம்பூர், மார்ச் 20 – ஹரிராயா ஐடில்பித்ரி பெருநாளை முன்னிட்டு, மின்சார இரயில் சேவை (ETS) மற்றும் கேடிஎம்பி (KTMB) இரயில்களில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது பயணச் சீட்டில் உள்ள தகவல்களைச் சரிபார்ப்பதோடு, திட்டமிட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே இரயில் நிலையங்களுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தள மேடைகளில் உள்ள கட்டணப் பகுதிகளுக்குள் நுழைவதில் சிக்கல்களைத் தவிர்க்க இந்தப் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இடிஎஸ் மற்றும் நகரங்களுக்கிடையிலான இரயில் சேவையின் தற்காலிகப் பொது மேலாளர் முகமட் அசார் அபு பக்கார், பயணிகள் கேடிஎம்பி-யின் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்ந்து கவனிப்பதோடு, அதன் அதிகாரப்பூர்வ செயலியைப் பதிவிறக்கம் செய்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மார்ச் 17 முதல் மார்ச் 29 வரையிலான இந்த நெரிசலான பெருநாள் காலத்தில், பயணிகளின் வசதிக்காகவும் தடையற்ற பயணத்திற்காகவும் அனைத்து இரயில்களும் முறையாகப் பராமரிக்கப்பட்டுச் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கோலாலம்பூர் சென்ட்ரல், ஜேபி சென்ட்ரல், அலோர் ஸ்டார், ஈப்போ மற்றும் பட்டர்வொர்த் போன்ற முக்கிய நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஹரிராயாவுக்காக கேடிஎம்பி இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய அளவிலான பயணச் சீட்டு விற்பனையை மேற்கொண்டுள்ளது.

சாதாரண சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட 1 லட்சத்து 80 ஆயிரம் பயணச் சீட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், பயணிகளின் தேவையைக் கருதி மேலும் 71,728 கூடுதல் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக அசார் அபு தெரிவித்தார்.

இதன் மூலம் மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமான பயணச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.