ஷா ஆலம், ஜூன் 12: கோலாலம்பூர், லாபுவான், சிலாங்கூர் மாநிலத்தின் சில மாவட்டங்கள் மற்றும் நாட்டின் ஒன்பது மாநிலங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று பிற்பகல் 3.05 மணியளவில் வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வானிலை எச்சரிக்கை அறிக்கையின்படி, சிலாங்கூர் மாநிலத்தில் உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு கிள்ளான் ஆகிய மாவட்டங்கள் இந்த வானிலையால் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், கோலாலம்பூர், பினாங்கு மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகள் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், கெடா, பேராக், கிளந்தான், திராங்கானு, பகாங், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களின் சில குறிப்பிட்டப் பகுதிகளிலும் இன்று மாலை 6 மணி வரை இந்த வானிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று கணிக்கப்படும் மழையின் அளவு, மணிக்கு 20 மில்லிமீட்டரைத் தாண்டும் போது அல்லது இடியுடன் கூடிய புயல் அறிகுறி தென்படும் போது, வானிலை ஆய்வு மையத்தால் இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.






