ஷா ஆலம், ஜூன் 12: இன்று நண்பகல் 12 மணி வரை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று காலை 8.50 மணியளவில் வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வானிலை எச்சரிக்கை அறிக்கையின்படி, சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் இந்த வானிலையால் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், மலாக்கா மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் சில குறிப்பிட்டப் பகுதிகளிலும் இந்த வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று கணிக்கப்படும் மழையின் அளவு, மணிக்கு 20 மில்லிமீட்டரைத் தாண்டும் போது அல்லது இடியுடன் கூடிய புயல் அறிகுறி தென்படும் போது, வானிலை ஆய்வு மையத்தால் இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.






